ஞாயிறு, 28 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 35: 8. மனநலம்

தொல்தமிழர் அறிவியல் – 35: 8. மனநலம்

மனச் சிதைவு
                    மன உளைச்சல் முக்கியத்துவம் வாய்ந்த உளநல பிரச்சினை என்று உலகளவில் மன உளைச்சல் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
                 பெண்கள் மற்றும் 35 வயதுக்குக் கீழுள்ளவர்கள் அச்சம், பீதி, அமைதியின்மை உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு அதிகமாக பாதிக்கப்படுவதை 48 ஆய்வுகளை பரீசலனை செய்துள்ள இந்த மீளாய்வு உறுதி செய்துள்ளது.—BBC.

                               ” உணர்வு, சிந்தனை, நடத்தை ஆகியவற்றிடையே ஒருங்கிணைவு இன்றிப் போய்விடுவதாலும் ஏனைய மனிதர்களிடமிருந்தும் எதார்த்த வாழ்க்கையிலிருந்தும் விலகிப் போய்விடுவதாலும் ஏற்படும் சீர்கேடுகளின் தொகுதியே மனச் சிதைவுஎனப்படுகிறது.
                 மனம் என்பது சிந்தனை, உணர்வு, செயல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைவது. இப்பண்புகள் ஒன்றோடொன்று முரண்படுமானால் மனநிலை ( உயிர், உடல்) பாதிக்கப்படுகின்றது.
               மனிதர்கள் இன்னும் போதிய அளவு மனப்பண்பு பெறவில்லை. அவர்களுடைய உள்ளங்களில் இன்னும் விலங்குணர்ச்சி போராடிக் கொண்டிருக்கிறது. என்கிறார் பிராய்டு.
               மனிதனின் மூளை  விலங்குகளின் மூளையைவிட வளர்ச்சி அடைவதற்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது. விலங்குகள் அடையாத வளர்ச்சியை மனிதன் அடைவதற்கு மூளையே காரணம். உனக்கு மூளை இருக்காஅறிவு இருக்கா..? என்று கேட்பதன் பொருள் புரிகிறதா…?
              மனம் எனக்கருதி நாம் வகுக்கும் விதிகள் அல்லது மனத்தின் செயல் என்று சொல்வதெல்லாம் மூளையைத் தலைமைச் செயலகமாகக் கொண்டியங்கும் நரம்பு மண்டலத்தின் செயல்களே.
 மூளையில் சிந்தனை பிறக்கிறது, செயலையும் உணர்வையும் தீர்மானிக்கிறது . இதன் தீர்ப்பு சரியாக இருக்குமானால் மனிதரிடம்
பண்புவிளக்கம் பெறுகிறது.
 பண்புடையார்ப்  பட்டுண் டுலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். --குறள்.996
மன ஆய்வுக் கொள்கை
                  பிராய்டு தனது மனப்பகுப்பு ஆய்வுக் கொள்கையின்படி (Psychoanalytic theory)  மனத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கிறார்.
 புற மனம் / வெளி மனம்(Conscious mind)
 இடை மனம் / நடுமனம்  (Sub- Conscious mind)
அகமனம் / ஆழ்மனம் ( Unconscious mind )  என்பன அவை.
                புறமனம் புறவுலகுடன் தொடர்புடையது ; இடைமனத்துடன் ஒத்து இயங்குகிறது ; மனிதனின் செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதுடன் மனத்திறனையும் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்துகிறது..
இடைமனம் குழந்தைப் பருவத்திலேயே உருவாகிறது ; இது புறமனத்திற்கும் அகமனத்திற்கும் தொடர்புடையதாயினும் பெரும்பாலும் அகமனத்தையே கட்டுப்படுத்துகிறது.
               அகமனம் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உறைவிடமாக விளங்குகிறது; புறமனத்திற்கு எட்டாநிலையில் இருக்கிறது. இங்குதான் மனித இயல்புணர்வுகளும் (Instinctive Drives )  நிறைவேறாத ஆசைகளும் வெளிமனத்திற்கு வராமல் அடக்கி  ( Repressed ) வைக்கப்படுகின்றன. இம்மனத்தில் ஆழப் புதைந்து கிடக்கும் ஆவேச உணர்ச்சிகளும் அடக்கிவைக்கப்பட்ட பாலுணர்வும் பகைமை எண்ணங்களும் மனநோய்க்கு வித்திடுகின்றன என்பது இவ்வாய்வுக் கொள்கையின் கருத்தாகும். மேற்கூறிய மூன்று மனநிலைகளும் உருவமற்றவை.
  இவ்வாறே மனிதனுடைய ஆளுமையை ( Personality)  மூன்று பகுதிகளாகப் பகுத்திருக்கிறார் பிராய்டு.------தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக