வெள்ளி, 12 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 19

தொல்தமிழர் அறிவியல் – 19
உலகத் தோற்றம் -- 2
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக
             ----மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 453 – 455
                       திசைகளை உடைய ஆகாயத்துடன் காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும் ஐந்து பூதங்களையும் ஒரு சேரப்படைத்த மழுப்படையாகிய வாளினையுடைய பெரியோன் ஏனையோரின் முதல்வன் ஆவான்.
சிவபெருமான், நெடியோன் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளான்
(மாகம்- திசை ; மழுசிவன் கையில் உள்ள வாள் ; நெடியோன்சிவபெருமான்.)
 ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆகத்
தேன் தூங்கும் உயர்சிமைய
மலை நாறிய வியல்ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப
வியல் நாள் மீன் நெறி ஒழுகப்
 பகற் செய்யும் செஞ்ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
----மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 1 -12
                              அகன்ற நீர்ப்பரப்பில் உயர்ந்த அலைகள் எழுந்து ஒலிக்கும் கடலை எல்லையாகக் கொண்டு, தேன் அடைகள் தொங்குகின்ற உயர்ந்த சிகரங்களைக் கொண்ட மலைகள் தோன்றிய இவ்வுலகத்தில், ஆகாயத்தின்கண் காற்று வலமாகச் சுழன்று வீசிற்று, அகன்று விளங்கும் நாள் மீன்கள், தாம் இயங்குவதற்குரிய பாதைகளில் பிறழாது இயங்கின. பகற் பொழுதை உண்டாக்கும், சிவந்த கதிர்களை உடைய ஞாயிறும், இரவுப் பொழுதை உண்டாக்கும் வெண்ணிறக் கதிர்களை உடைய திங்களும் குற்றமில்லாமல் விளங்கித் தோன்றின. மேகங்கள், மழை வேண்டும் காலத்துப் பிழையாது தம்முடைய பெய்தல் தொழிலால் உதவி புரிந்தன. அதனால், எல்லாத் திசைகளிலும் விளையுள் பெருகி, வளம் கொழித்தது, ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி விளைந்தது, விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிர்க்கும் தாம் பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டு தவறாமல் வழங்கின.
                            நீர்ப்பரப்பு முதலில் தோன்ற, அதன்பின் நிலப்பரப்பு, கடலிலிருந்து வெளிப்பட்டது. உலக அமைப்பு, காற்று மண்டிலம், விண்மீன்களின் இயக்கம் ஆகிய வானியல் செய்திகள் அறிந்து  இன்புறுதற்குரியன.
மாநிலம்
பரிதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம்
                                                               --வான்மீகியார், புறநா. 358 : 1
சூரியனால் சூழப்பெற்ற, பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்.
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது
                                                            --கல்லாடனார், புறநா. 371 : 1
அகன்ற இடத்தை உடைய இந்நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் புரவலரைக் காணப்பெறாமையான்

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
                                                   --ஐயாதிச் சிறுவெண்டேரையர், புறநா. 363 : 1
கரிய கடல் சூழ்ந்த இப்பெரிய நிலவுலகத்தை.---------தொடரும்

1 கருத்து:

  1. தற்போது பக்தி இலக்கியங்களின் பகுதியான பன்னிரு திருமுறைகளையும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தினையும் வாசித்து வருகிறேன். தொடர்ந்து சங்க இலக்கியங்களை வாசிக்க உள்ளேன். உங்களின் இத்தொடர் பதிவு அந்த ஆவலை மேம்படுத்துகிறது ஐயா.

    பதிலளிநீக்கு