வியாழன், 25 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 32 : 8. மனநலம்




தொல்தமிழர் அறிவியல் – 32 : 8. மனநலம்

8. மனநலம்

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். --குறள். 457.
 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்- என்ற  ஓர் உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை  உலகிற்கு வழங்குகிறார் திருவள்ளுவர். மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு(1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் .
மேற்சுட்டியுள்ள குறட்பாவை, அறிவியல் உலகம் திருவள்ளுவரின் அரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனநலம் என்பது மனத்துக்கண் மாசின்றி இருத்தலே. அஃதாவது..
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. --குறள். 34.
ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.
To be quite free from mental blots is all that’s righteousness
And all the rest of acts without such freedom are but fuss.
                                                                 (Tr.)  K.M.Balasubramaniam
மனம்சில வினாக்கள்
                     உளவியல் அறிஞர் திருவள்ளுவர் மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்என்றார். மனிதன் மனநலம் பெறஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்ஆக இருக்கவேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் நன்மை பயக்கும் என்று கூறுகின்றார். இன்றைய அறிவியலும் மனிதனுக்கு வரும் நோய்கள் பலவற்றிற்கு மனமே அதாவது கவலை . பதற்றம் போன்றவையே காராணம் என்று கூறுகிறது. திருவள்ளுவரின் கண்டுபிடிப்பும் இதுதான்.
மனம் என்றால் என்ன….?
                         அது மனிதனிடம் மட்டும்தான் இருக்கிறதா? அப்படியென்றால் அது ஓர் உறுப்பா..? அல்லது ஆற்றலா..? மனம் மனிதனின் அகத்தே உறைந்து கிடக்கும் சக்தியா.?. அல்லது புறத்தேயிருந்து இயக்கும் ஒரு சக்தியா..? மனம் என்பது குரங்கா..? அதனை அடக்கி ஆளத் தெரியாது மனிதன் அழிகின்றானா..? மனம் அலைபாயும் தன்மை கொண்டதா..? மனத்தை நிலைப்படுத்த வேண்டுமா..?  மனத்தை ஏன் நிலைப்படுத்த வேண்டும்; மனம் அமைதி பெறவா..? மனம் ஏன் அமைதி இல்லாமல் அலைகிறது..?  அளவுக்கு மீறிய ஆசையினாலா..? அமைதியாக இருந்து மனத்தை ஒரு நிலைப்படுத்த முடியுமா..? அது எல்லோராலும் இயலும் ஒன்றா..?.
மேலும் சில வினாக்கள்
                      வாழ்க்கையில் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளைச்
 ( பிறழ்வினைகள் ) சந்திக்கும் மனிதர்களுக்கு மன நிம்மதியே கிடையாதா..? அவர்கள் அற்ப ஆயுளில் இறந்து விடுகின்றனரா,…?
                          இல்லற வாழ்க்கையை வெறுத்து ( வெறுக்க முடியாது என்பது இயற்கை விதி; இறைவன் விதியை விட மேலானது.)  முற்றும் துறந்துபிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்பவர்களுக்கும் மன அமைதி இல்லையே ஏன்..? அமைதி வேண்டி அமைதியில்லாமல் அலைவதேன்..?
 மனத்தை ஒரு நிலைப்படுத்த கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்க வேண்டுமா..? மனத்தை ஒரு நிலைப்படுத்தல் என்பது ஈடுபாடாகாதா..?
 தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே , ஒருவன் ஒரு வேலையையோ, விளையாட்டையோஇசையையோ, கற்பதையோ, கற்பிப்பதையோ செய்தால் அது மனத்தை ஒருநிலைப்படுத்தியதாகாதா..?
 மனத்தை ஒரு நிலைப்படுத்த பயிற்சி வேண்டுமா.. பகுத்தறிவு வேண்டுமா..?
அமைதி வேண்டி ஆலயத்திற்குச் செல்வதும் தனிமையில் இருப்பதும் தன்னை வருத்திக்கொள்வதும் தன்னைத் தண்டித்துக்கொள்ளும் மனநோய் இல்லையா..?
                        மன அமைதி எதனால் தேவைப்பட்டது..?  செய்யவேண்டியதைச் செய்யவில்லை ; செய்யக்கூடாதவற்றைச் செய்ததனால்தானே..! அறிவினால் செய்ய வேண்டியதை ஆராயாதுஅமைதியை ஆராய்ந்து செய்துவிட முடியுமா..? அல்லது ஆரவாரத்தால்தான் செய்துவிட முடியுமா..? “ மவுனம் கலக நாஸ்தி
என்பார்கள்; தப்பித்துக் கொள்ளவா.. தடுமாற்றம் தவிர்க்கவா..? அது எல்லா இடத்திற்கும் பொருந்துமா.. ? ------தொடரும் ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக