தொல்தமிழர் அறிவியல் – 30 : 7. தாய்ப்பால்
7. தாய்ப்பால்
இன்றைய இயந்திரமயமான உலகில் ஒரு தாய்
தன்னுடைய குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது. அன்னை தன்
உதிரத்தை உருக்கி மழலைக்கு ஊட்டும் மாமருந்து தாய்ப்பால்;
இயற்கை வழங்கிய இனிய அமிழ்தம். குழந்தை நோய்நொடியின்றி
நூறாண்டுக் காலம் வாழக் குழந்தை வளர்ப்புக் கட்டுமானத்தின்
அடித்தளமாக அமைவது தாய்ப்பாலே.
பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அறிவும் ஆற்றலும் அன்னையின் பாலூட்டல் வழியே குழந்தையின் உயிருக்கும் உடலுக்கும் ஊட்டமாக அமைகின்றது.
தாய் தன் குழந்தையை அன்போடு அரவணைத்து ஊட்டும் பால் தாய்க்கும் இன்பம் தருமாமே!
மக்கள் மெய்தீண்டல் உடற்கு இன்பம் – என்றார் திருவள்ளுவர்.
“பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்துக்
கால்வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா
மருதன் இளநாகனார்
கலித். 81: 8 – 9
பாலோடு விம்மின முலையிலே பால் பருகவும் மறந்து. முற்றத்திலே கையாலே தேரை உருட்டித் தள்ளியவாறு நடை பயின்றனன்.
எம் முலை பாலொடு வீங்க …... 82
தீம்பால் பெருகும் …..
83
மென் முலைப் பால் பழுதாக…… 84
மாவினுடைய உயர்ந்த கொம்புகளினின்றும்
மிக்க காற்றால் அசைக்கும் நறிய வடுக்கள் காம்பு முறிதலின் பால் வடிவதுபோல. பால்
மிகக் குதிக்கையினாலே அதனையான் மறைத்தேன் ; என் அங்கையல் அமுக்கித்
தேய்க்கவும். கையின் எல்லையில்
நில்லாவாய் விம்மிச் சுரந்த என் முலைப்பால் பிள்ளை உண்ணாமல் பாழே போம்படி ஆயிற்று” என்றாள் தலைவி.
“
மேற்சுட்டியுள்ள கலித்தொகைப் பாடல்களில் தாய்ப்பால் பருகும் புதல்வன் – மழலைப் பருவத்தினன்
என்று எண்ணிவிடக்கூடாது. புதல்வன் புத்தேளிர்
கோட்டம் வலம் செய்தும் விளையாடியும் கடவுட் கடிநகர் வலம் கொண்டுவரும் வயதினன் என்பதை அறிதல் வேண்டும். அக்காலத்தே ஆண் குழந்தைகள் நான்கு
/ ஐந்து வயதுவரை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர்
நல்குரவு சேரப்பட்டார்
நல்லாதனார், திரிகடு.
84
துறையின்றிக்கிடக்கும் குளம் வழிச்செல்வார் வருத்தம் தீர்க்க
உதவாது பயனற்றுப் போகும் ; வயிறு நிறையத் தாய்ப்பால் அருந்தாத குழந்தை வலிவும் பொலிவுமாகிய வளம் இழந்து
வறுமையில் வீழும்; இளமையில் கல்விபயிலாத மாந்தரின் வாழ்க்கை வறுமையின்
வாய்ப்படும் எனபார் .
ஊரா நல்தேர்
உருட்டிய புதல்வர்
தளர்
நடை வருத்தம் வீட அலர் முலைச்
செவிலி
அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து
அமளித்
துஞ்சும் ...
கடியலூர் உருத்திரங் கண்ணனார் ,
பெரும்பாண்.249-252
தச்சர்களின்
பிள்ளைகளும் விரும்பும்படி புனைந்த நல்ல சிறு தேர்களை உருட்டித் திரிந்த
சிறார்கள், அங்ஙனம் தளர் நடையிட்டுத் திரிந்த தம் வருத்தம் அகலும்படி பால் சுரந்த
முலையினையுடைய செவிலித் தாயரைத் தழுவிப் பாலை நிறைய உண்டு தமது படுக்கையிலே நன்கு
துயில் கொள்ளும் அழகையுடையனவாகிய நல்ல இல்லங்களையும் என்றவாறு. பெருமழைப் புலவர்
பத்துப்பாட்டு உரை ப. 117.
இதனால் செவிலித்தாயும்
குழந்தைக்குப் பாலூட்டும் வழக்கம் பண்டுதொட்டே நிலவி வருவதை அறிய முடிகிறது.
வற்றிய முலையில் பால் சுரத்தல்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச்
சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
ஒளவையார், புறநா. 295: 4 – 8
போர்க்களத்தில், படைத் திரளின் இடையில்
வெட்டுண்டு உடல் சிதைந்து வேறுபட்டான் வீரன் ஒருவன். பின்னிட்டு
ஓடாத கொள்கையினை உடைய அவ்வீரனுக்குத் தாயாகிய இவள், சிறப்புக்குரிய
தன் மகனின் மறமாண்பு கண்டு அன்பு மேலிட, அத்தாயின் வற்றிய முலைகளில்
பால் ஊறிச் சுரந்தன.
இயல்பாகவே, பிறந்த குழந்தை முதன்முதலாகத்
தாயின் முலைக் காம்பில் பால் உறிஞ்சும் போது, தாயின் உடலும் உள்ளமும் உணர்ச்சி மேலிட பால் சுரக்கும்.
தாய்ப்பால் சுரப்பதற்குத்
தாயின் உள்ளன்பு மிகவும் இன்றியமையாதது என்பது இப்பாடல்வழி அறியமுடிகிறது.-------தொடரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக