வெள்ளி, 26 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 33: 8. மனநலம்

தொல்தமிழர் அறிவியல் – 33: 8. மனநலம்


மனசாட்சி என்றால் என்ன..?
                 மனசாட்சி என்று கூறுகிறார்கள்மனம் நமது செயலுக்குப் புறத்தே இருந்து சாட்சி ஆகிறதா.. அல்லது அகத்தே இருப்பதைக் கண்டுகொள்ளாமல் செயல்படுகிறோமா..? அறியாமல்தெரியாமல்உணர்ச்சிவசப்பட்டு , மனசாட்சிக்கு எதிராகச் செய்தேன் என்றால் நம் செயலைத் தீர்மானித்தது எது..? அறிவைப் புறந்தள்ளி மனம் எவ்வாறு செயல்படுகிறது..?  சிந்தனை செய் மனமே என்கிறார்கள்.. சிந்தனை நிகழும் இடம் மனமா? சிந்தனை என்பது அறிவாற்றல் இல்லையா..? மனம் குறித்த இவ்வினாக்களுக்கு விடை கிடைக்குமா..? … தொடரும்….
மனம் என்றால்….!
                     மனம் என்பது அறிவுஆறாவது அறிவு அதாவது பகுத்தறிவு என்று கூறுகின்றார் தொல்காப்பியர். மனம் உடைய மனிதன் சிந்திக்கும் ஆற்றலால் உயர்திணை ஆகிறான். இதனால் மனம் வேறு அறிவு வேறு எனின்  அல்ல என்பது தெளிவாகின்றது. மூளையின் ஒருங்கிணைந்த செயற்பாடுதான் மனம் என்று சுட்டுவர். அறிவு செயல்படும்பொழுது முரண்பாடுகள் நிகழுமேயானால் விலங்கு நிலைக்குக் கீழேகூட மனிதனின் செயற்பாடுகள் அமைந்துவிடுகின்றனதொல்காப்பியர் ஆறாவதுஅறிவை மனம் என்றது அறிவியல் சிந்தனை ; அஃதாவது அறிவியல் ஏற்றுக்கொள்ளும் உண்மை.

திருவள்ளுவர்மனம்
                     மனம் குறித்து ஆராய்ந்த திருவள்ளுவர், “ ஒருவன் தன் மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாக இருத்தல் வேண்டும் ; அறம் எனப்படுவது அஃதே ; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரத் தன்மையுடையனவேஎன்றார்.
                        மனத்துக்கண் மாசிலனாதல் இயலுமா..? இது ஒரு மிகப்பெரிய வினா. மனம் எதையாவது ஒன்றைப் பற்றி நிற்பது இயல்புதானேதெளிவான மனத்தைப் பெறுவது எப்படி..?  அதற்கான விடையைத் திருவள்ளுவரே கூறுகின்றார்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (35)
                          பொறாமை ஆசை கோபம் கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கிவிட்டுச் செய்கின்ற எல்லாக் காரியங்களும் அறங்களேயாகும் என்பார். மனம் மாசு அடைய மேற்சுட்டிய நான்கும் காரணமாதலின் இவற்றை நீக்கி வாழ முற்படுவோமானால் உடலும் உள்ளமும் வளமாகி நெடிது உயிர் வாழ்தல் எளிதாகும் என்பதறிக. பொறாமை முதலிய நான்கனுள் ஏதேனும் ஒன்றாவது உள்ளத்தைப் பற்றி உளைச்சல் தருமானால் நோய்வாய்ப்பட்டு நலிதல் உறுதி என்பது வள்ளுவர் கூறும் மனநோய் மருத்துவமாகும்.
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (278)
                   மனத்துள்  மாசு நிறைந்திருக்க, தவ ஒழுக்கத்தால் மாண்பு பெற்றவரைப் போல் நீரில் மூழ்கி ; மறைந்நொழுகும் வஞ்சனை உடைய மாந்தர் பலர் உலகில் உள்ளனர். பொன்னாசை, பொருளாசை, பெண்ணாசைகொண்டு முற்றும் துறந்தவர் என மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் கயவர்களைச் சுட்டிக் கருத்துரைத்தார்.  
                         மேலும்  சிற்றினஞ்சேராமை (46) இடுக்கணழியாமை (63) அதிகாரங்களில் மனநலம் முறித்து மிக விரிவாகப் பேசுகின்றார். உளவியல் அறிவியல் வழி மக்கட்சமுதாயத்தை ஆராய்ந்த திருவள்ளுவர் தனிமனித ஒழுக்கம்அதுசார்ந்த வாழ்வியல் ஒழுக்கம், உலகியல் ஒழுக்கம் ஆகியவற்றை நடத்தை விதிகளாக வகுத்துக் கூறுகின்றார்திருக்குறளின் மனநல ஆய்வு, உலகமக்களின் உயரிய வாழ்க்கைக்குத் திருவள்ளுவர் வழங்கிய அரிய அறிவியல் அறிவுரைக் களஞ்சியம் எனலாம்.
திருவள்ளுவர்மனம்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை . (295)
                               ஒருவன் தன்மனத்தொடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தொடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன் என்கிறார். ஈண்டு வள்ளுவர் மனம் என்று குறிப்பிடுவதுஎண்ணம்” – மனத்தொடு வாய்மை எனப்படுவது எண்ணத்தூய்மைஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதிருப்பது.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். (453)  
                            மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும். இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்என அறிவு திரிதலைக் குறிப்பிடுகின்றார். சிற்றினம் சேர்ந்தால் அறிவு கெடும். மனத்தூய்மையும் செய்வினைத்திறனும் ஒருவன் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பொறுத்தே அமையும் எனவே, சிந்தனையும் செயலும் தூய்மையானதாக இருக்க வேண்டுமானால் சிற்றினம் சேராதிருக்க வேண்டும் என்பது கருத்தாகின்றது.
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் .
                      மனத்தெளிவு  - எண்ணத்தூய்மை உயிர்க்கு ஆக்கமாகும். தூய்மை காக்கும் வண்ணம்  இனநலம் (நட்பு / உறவு ) கொள்வோமானால் அது நமக்குப் புகழைத் தரும். மனம் நலமுடன் இருக்க எளிமையும் நேர்மையும் இன்றியமையாதன. எளிமை இல்லாத இடத்தில் நேர்மை இருக்க வாய்ப்பில்லை. எளிமையும் நேர்மையும் இல்லாத மனத்தில் அமைதி இருக்காது- மனத்தூய்மை நோய்களை அண்டவிடாது செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்பதைக் குறித்தே வள்ளுவர்  - மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்என்றார்.--------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக