புதன், 13 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –432: ஆற்றுப்படை

 

தன்னேரிலாத தமிழ் –432: ஆற்றுப்படை

ஆற்றுப்படை என்பது நமது முன்னோர்களாகிய சங்கச்சான்றோர் பாடிய பாட்டு வகைகளுள் ஒன்று. ஆற்றுப்படை என்றால் ஆற்றின்கண் படுப்பது ஆறு – வழி; படுப்பது- செலுத்துவது, அஃதாவது ஒருவர் செல்ல வேண்டிய வழிதுறைகளைச் சொல்லி அவ்வழியே செல்லுமாறு விடுப்பது. நமது இலக்கியச் செல்வங்களை அரணாக நின்று பாதுகாப்பது இலக்கணங்களே. தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் ஆற்றுப்படையின் இலக்கணத்தை….

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

 ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்று பயனெதிர் சொன்ன  பக்கமும்.” என்று கூறும்.

 ஒரு வள்ளலிடம் சென்று பெரும் பொருள்  பரிசிலாகப் பெற்று வந்த பொருநர், பாணர் விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர், பரிசில் பெற விரும்பி வரும் ஒருவருக்குத் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைச் சுட்டிக்காட்டி அதனை அளித்த வள்ளலிடம் செல்லுதற்குரிய வழிதுறைகளையும் எடுத்துச் சொல்லி அவ்வள்ளல்பால் போகுமாறு கூறுவது ஆற்றுப்படை எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக