தன்னேரிலாத தமிழ் –435: குறள் கூறும் ”பொருள்” பெறுக
471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
ஒருவன், தான் செய்யக்கருதும் செயலின் தன்மையையும்; தன்முயற்சியின் வலிமையையும் ;எதிர்ப்போர் வலிமையையும் ;இருவர்க்கும் துணையாக நிற்போர் வலிமையையும் ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும்.
“ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோது ஒழீஇக் கொள்கை முதுக்குறைவு நேர்நின்று
காக்கை வெளிது என்பார் என்சொலார் தாய்க்கொலை
சால்புடைத்து என்பாரும் உண்டு.” –நீதிநெறிவிளக்கம், 33.
காக்கைக்கு எதிரிலேயே நின்றுகொண்டு, அதன் நிறம் வெண்மை என்று சொல்பவர்கள், வேறு என்னதான் சொல்ல மாட்டார்கள்..? தாய்க்கொலை புரிதல்கூடப் பொருத்தமான செயலே, என்று கூறுகின்றவர்களும் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள்.ஆகவே, பிறர் என்ன கூறினாலும் அவர்கள் கூறுவதில் குற்றம் பொருந்தியவைகளை நீக்கிவிட்டு குணம் மிக்கவைகளையே கொள்ளுதல் வேந்தனுக்கு அறிவுடைமையாகும். எனவே, எதையும் ஆராய்ந்து பார்த்து நல்லவற்றைக் கொள்வதே வேந்தனின் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக