வெள்ளி, 20 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -71. தெய்வத்துத் திறன் நோக்கி.... !

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -71. 

  முனைவர் இரெ. குமரன்: 6. கலித்தொகை: 

             தொல்தமிழர் -  வழிபாடு : தெய்வத்துத் திறன் நோக்கி.... !  

“செய்பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார் மாட்டு இனையன  

 தெய்வத்துத் திறன் நோக்கித் தெருமரல் - தேமொழி    

வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்   

நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு என    

அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினைத் திறத்தே.”  

                                        - பாலை பாடிய பெருங்கடுங்கோ, 16, 18 – 22.

தேமொழி , செய்வினையாற் பெறுகின்ற பொருளின் சிறப்பை எண்ணிச் சென்றவரிடத்து, தெய்வத்தின் அருளை வேண்டி மனம் சுழலுதல் வேண்டாம் ; வறட்சி மிகுந்து துயருற்ற காலத்தும் வையம் கெட்டதாகில் அவ்வையகத்திடத்தே மழையைப் பெய்விக்கும் கற்பினை உடையாளுடைய தன் அழகு கெட்டுப் பசலை பாய்ந்து விடுதலும் நிகழுமோ என்று அறக்கடவுள் தானே கருதி, அவர் முயற்சி இடத்தே விரைந்து சென்று விலக்கி நின்றது ; நீ கவலை அடையாதே என்றாள் தோழி.  

( தெய்வத்தை வணங்காது, கணவனையே கடவுளாக எண்ணி வாழ்பவள் பெய் என்றால் மழை பொழியும் என்ற குறள் கருத்தின் சான்றாகத் திகழ்பவள் இத் தலைவி.)  

( கற்பின் பெருமை இப்பாடலில் சிறந்து  நிற்கின்றது ; காதலன் நலம் வேண்டி மழையையும் கனலியையும் காற்றையும் வழிபட விரும்பிய தலைவிக்கு அறக்கடவுளே உதவுவது குறிப்பிடத்தக்கது.) 

 .....................................தொடரும்........................................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக