மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 10
கொற்கைத் தலைவன்
சீருடைய
விழுச் சிறப்பின்
விளைந்து
முதிர்ந்த விழுமுத்தின்
இலங்குவளை
இருஞ்சேரி
கட்கொண்டிக்
குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர்
நசைப் பொருந.
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 134 - 138
பெரிய நன்மக்களிடத்து மேம்பட்டுத் தோன்றுவதால் புகழையுடைய சிறந்த தலைமைப் பண்பினை உடையாய்-
சூல்முற்றி,
ஒளி முதிர்ந்து விளங்கும் சிறந்த முத்துக்களையும் – விளங்கும் சங்கினையும் மூழ்கி எடுப்பவர் உறையும் சேரிகளையும் கள்ளாகிய
உணவை உண்ணும் இழிந்த குடிகள் தங்கியுள்ள சிற்றூர்களையும்
கொண்ட கொற்கை என்னும் நல்ல ஊரில் உள்ளார் விரும்புதலையுடைய பொருநனே.
கொற்கை முத்து,சங்கு ஆகியவற்றைக் குளிப்பார்
இருக்கைகளையும், கள் உண்பார் இருக்கைகளையும் புறஞ்சேரிகளாய்க் கொண்ட ஊராகும். நெடுஞ்செழியன்
, கொற்கை என்னும் துறைமுகப் பட்டினத்திற்கு உரிமை பூண்டவன் என்பது இதனால் உணரப்படும்.
( கொண்டி
– கொள்ளப்படுவது – உணவு ஈண்டு, கள் உணவு ; வளை – சங்கு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக