புதன், 16 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 7
                                                          முது வெள்ளிலை
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
 வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பொளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்களிச் செறுவின் வெள் உப்புப்  பகநரொடு
ஒலி ஓவாக் கலியாணர்
முது வெள்ளிலை  
                  மாங்குடி மருதனார், மதுரைக்.  6 : 106 – 119
மலைகள் காய்தற்குக் காரணமாகிய கடிய முதுவேனிலால், பெரிய மேகம், மழையைத் தன்னிடத்து மறைத்து வைத்துக் கொண்டாலும், தான் தோன்றுவதற்கு உரிய நாளில் தோன்றும் வெள்ளி என்னும் கோள்மீன், தன்னுடைய இயங்கும் திசை மாறித் தெந்திசையில் தோன்றினாலும், யாறுகளில் வெள்ளம் மாறாமல் பெருகிவரும், அதனால் விளைவுகளும் பெருகும், வயல்களில் நன்கு விளைந்த நெற்பயிர் காற்றடித்து அசைதலால் எழும் ஓசையும்…
   நெற்கதிர் அறுப்போர் ஓசையும் – பறவைகள் எழுப்பும் ஒலியும் – சுறாக்கள் திரியும் கடலில் நீர்த்திவலைகள் – மணலையுடைய கடற்கரையில்  குடமுழாப் போன்ற காய்களையுடைய தாழையை வேலியாக உடைய  - இளமரக்காவில் வந்து செறிந்து வீசும் ஓசையும் -  மீன்வேட்டையாடிய படகுகள் கரையை அடையும் ஆரவாரமும் -  உப்பு விற்போர் ஒலியும் -  புது வருவாய் உடையதும் ஆகிய ஊர் முதுவெள்ளிலை ஆகும்.
   நெல் வளம், மீன்வளம், உப்பு வளம் ஆகிய மூன்றும் நிறைந்த பகுதியாக முதுவெள்ளிலை விளங்குகிறது. இவ்வூர்  குறித்து ஆய்க.
   ஓதை, கம்பலை, இசை எனும் சொற்கள் வேறுபட்ட ஒலிகளைக் குறிப்பன.
(கம்பலை – அரவம், ஓசை
 ‘ கம்பலை கம்மை கலியே அழுங்கல்
   என்றிவை நான்கும் அரவப் பொருள. ( தொல்.)
நெற்கதிர் அசையும் ஒலி – ஓதை ; நெல் அரிபவர், மீன்வேட்டுவர் எழுப்பும் ஒலி – கம்பலை ; பறவைகள் எழுப்பும் ஒலி – இசை ; உப்பு விற்பவர் எழுப்பும் ஒலி – ஒலி என்றும் குறிப்பிடுவார் இப்புலவர்.
 சலம் – மாறுபாடு ; பொதும்பர் – இளமரக்கா ; நளி – செறிவு ; திமில் – படகு ;  செறு – வயல் / உப்புப் பாத்தி ; அளவர் – உப்பளத் தொழிலாளர் ;யாணவர் – புதுவருவாய்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக