புதன், 9 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 9

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 9

போர் ஒழிய வேண்டி..
எடுத்தெறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம்  வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல்துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
 உண்ணது உயங்கும் மாசிந் தித்தும்
ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
  68 – 76]
பாசறையில் , மன்னன் ஒருகையைப் படுக்கை மேலே வைத்து, கடகம் அணிந்த மற்றொரு கையால் தலையைத் தாங்கியவனாய்ப் போர்மேற் செல்லும் மிக்க விருப்பத்தால், உறக்கம் கொள்ளாமல் இரவு முழுதும் போர்க்களக் காட்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருக்கிறான் ; போரில் பகைவர் எறிந்த வேல் பட்டமையால் புண் மிகுந்து, தம் பெண் யானைகளையும் மறந்து நின்ற களிறுகளை நினைக்கிறான் ; அடிபட்ட பாம்பு துடித்தாற் போன்று துடிக்கும் வண்ணம், களிறுகளின் பெரிய கையினை வெட்டி வீழ்த்தித் தாம் அணிந்த தேன் துளிக்கும் வஞ்சி  மாலைக்கு வெற்றியைத் தேடித்தந்து, செஞ்சோற்றுக்கடன் கழித்துப் போரில் வீழ்ந்துபட்ட வீரரை நினைக்கின்றான் ;  காவலாய்க் காதோரம் அணிவித்த தோற்பரிசையினையும் அறுத்துக்கொண்டு பாய்ந்த கூர்மையான அம்பு நுனிகள் அழுந்துவதால், தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும் குதிரைகளை நினைக்கின்றான் ; இங்ஙனம் பலவற்றையும் நினைத்து வருந்துவதால் உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றான் மன்னன்.
( கண்படை – உறக்கம் ; எஃகம் – வேல் ; துமிய – வெட்டுப்பட்டு வீழ ;  சோறு வாய்த்து ஒழிந்தோர் – செஞ்சோற்றுக் கடனாக உயிர்கொடுத்து இறந்தோர் ;  வைந்நுனைப் பகழி – கூர்மையான அம்பு ;  மா – புரவி ; கடகம்  - கங்கணைம் , ஆடவர் கையில் அணியும் அணி.)
மேலும் காண்க : புறநா.312 ; ம.காஞ். 735 – 736 ; கள. நாற். 13.
முற்றும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக