சனி, 29 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி – 13 - 15

நற்றிணை – அரிய செய்தி – 13 - 15
தனித்தோர் மன்று
முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலைப்
புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்து..
                                        இளவேட்டனார். நற்.33 : 2-3
முரம்பு நிலத்தே அமைந்த சிறுகுடியில் பரவிய மாலைப் போதில் தனித்தோர் கூடியிருந்து உண்ணும் பொலிவில்லாத மன்றத்தின்கண்..
 (முரம்பு – பரற்கற்களும் செம்மண்ணும் விரவிய நிலம் . மன்று – மன்றம் – பொதுவிடம் – மலைநாட்டு ஊர்களில் உள்ள பொதுவிடம்.)
நற்றிணை – அரிய செய்தி - 14
சிவந்த கண்கள்
……………………… மகிழ்ந்தோர்
தேங்களி செருக்கத் தன்ன
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே
அம்மூவனார். நற்.35 : 10-12
கள் உண்டோர்க்கு அக்கள்ளால் உண்டாகும் களிப்பு நிற்குங்காறும் கண் சிவந்து காட்டும் வேறுபாடு போன்ற -  காதற் காமக் களிப்போ இவள் கண் பசந்து தோன்றுதற்குக் காரணமாகும். ( கள் மிக உண்ணினும் காமக் கூட்டம் மிகினும் கண்சிவந்து காட்டும் என அறிக. கள்ளும் காமமும் மயக்குறுத்துவன. காண்க.- “ கடை மணி சிவந்த நின் கண்ணே… நற்.39.)
நற்றிணை – அரிய செய்தி - 15
புதல்வனைக் காணல்- புத்திரமுக தரிசனம்
 நள்ளென் கங்குற் கள்வன் போல
அகன்றுறை யூரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே
கோமால் நெடுங்கோடனார். நற்.40: 10 – 12
கன்ற நீர்த்துறையை உடைய ஊரனும் சிறந்த தந்தையின் பெயர் கொண்ட தன் மைந்தன் பிறந்தமைக்கு மகிழ்ந்து ……………
 மகன் முகத்தையும் மனைவி முகத்தையும்  நோக்குமிடத்துச் சுருங்கிய பார்வையுடையனாய்ச் சட்டென நீங்கினமையின் கள்வன் போல என்றும்.கூறினார்.

 மகப்பேறு  நிகழ்ந்த மனையைத் தூய்மை செய்து முற்றத்தே பந்தரிட்டுப் புது மணல் பரப்பி .மணி ஒலிக்க  மங்கல மகளிர் மகப்பெற்ற தாய்க்கு நெய்யாட்டீரணி செய்வர். தலைமகன் அக்காலத்தே தூய நீராடிச் சீரிய உடை அணிந்து பிறந்த புதல்வனைக் காண்பான். மகன் பிறந்தானைக் காணப் போந்த அதியமான் நெடுமான் அஞ்சியை உடனிருந்த மகளிருள் ஒருவராகிய ஒளவையார் பாடிய புறப்பாட்டு இங்கே நினைவு கூரத்தக்கது. இஃது இடைக்காலத்தே புத்திரமுக தரிசனம் என மொழிபெயர்க்கப்பட்டு வழக்கில் இருந்துவந்தமை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக