திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி – 19 - 21

நற்றிணை – அரிய செய்தி – 19
முருகு வழிபாடு
 காதலால் மெலியும் தலைவியைக் கண்ட தாய் – இவள் நோயுற்றாள் என்று கருதி வெறியாட்டு நிகழ்த்துவாள்.
 வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
 அன்னை அயரும் முருகுநின்
 பொன்னேர் பசலைக் குதவா மாறே.
நல்வெள்ளியார். நற். 47 : 9 – 11
 வெறிக்களம் அமைத்து வேற்படையை நிறுத்தி ஆட்டுக்கிடாயை அறுத்துச் செய்யப்படும் முருகு வழிபாடு; நின் பொன்போலும் பசலை நீங்க  உதவாது.
நற்றிணை – அரிய செய்தி – 20
பெருஞ் செல்வர்
 மழவர் பெருமகன் மாவள் ளோரி
 கைவளம் இயைவ தாயினும்
 ஐதே கம்ம இயைந்துசெய் பொருளே
நப்பாலத்தனார். நற். 52: 9 - 11

வெவ்வியப் போரைச் செய்யும் மழநாட்டார்க்குத் தலைவனும் ‘ பெரிய வண்மையுடையவனுமாகிய வல்வில் ஓரி என்பானது; கையகத்துள்ளது போலும் பேரளவிற்றாய செல்வம் எய்துவதாயினும் ;  நெஞ்சே  ! நின்னோடு கூடிச் சென்று செய்யும் அப்பொருள்  மெல்லியதேயாகும்……!

நற்றிணை – அரிய செய்தி – 21
மேனியில்  மத நாற்றம்
உறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிளர் ஆகம் புல்லலின் வெறிகொள
பெருவழுதியார். நற். 55 : 3-4

   இரவுப் போதில் குறியிடம் போந்து ‘ தேமல் பரந்த இவளது மார்பை முயங்குதலால் ; இவள் மேனி மத நாற்றம் கமழ்தலின்….. ( இம்மணம் இவட்குப் புதிது புணர்ந்ததொன்று என்றும்  பண்டெல்லாம்  இவ்வாறு நாறுதல் இல்லையென்றும் எண்ணி – அன்னை வினா எழுப்பினாள் ) மருத்துவ அறியல் நோக்கில் ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக