ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி – 16 -18

நற்றிணை – அரிய செய்தி – 16 -18
வழிப்போக்கர் – உணவு
துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஒய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு
அத்தம் செல்வோர்க்கு வல்சி யாகும்
எயினந்தையார். நற். 43 : 1  5
 வெண்மையான ஆடையை விரித்தாற் போல ஞாயிற்றின் வெயில் விளங்குவதால் உண்டான வெப்ப மிகுதியால் ; மூங்கில்கள் நெடிது வளர்ந்த மலைப் பக்கத்தில் ; மிக்க பசியினையுடைய செந்நாய் வாடிய மான் ஒன்றைக் கொன்று ; உண்டு கழித்த மிச்சிலாகிய ஊன் ; சேய்மையிலுள்ள நாடுகட்குச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு உணவாகும்.
நற்றிணை – அரிய செய்தி - 17
மழையின் இயக்கம் காணல்
   …………. ……. …….. நீடிய
பன்மா உயர்சினை மின்மினி விளக்கத்துச்
சென்மழை இயக்கம் காணும்
நன்மலை நாடன் காதன் மகளே.
பெருங்கோசிகனார். நற். 44 : 9 – 12
  நெடிது உயர்ந்த மரங்கள் பலவற்றின் உயர்ந்த கிளைகளில் தங்கி மிளிரும் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில் – வானத்திற் செல்லும் மழை முகிலின் இயக்கத்தைப் பார்த்துச் செய்வன தெளியும் நல்ல மலைநாடனின் அன்பு மகள்.
நற்றிணை – அரிய செய்தி – 18
காதல் மறுப்பு
தலைவா ! இவளோ சிறுகுடியில் வாழும்  - கடலில் மீன் வேட்டம் புரியும் பரதவருடைய மகள்….. நீயோ  தேரையுடைய   செல்வனுக்குச் செல்ல மகன்…..
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே
உலோச்சனார். நற்.45 :  7 – 11
மீன்களை உலர்த்தும் போது அவற்றைக் கவர்தற்கு வரும் பறவைகளை ஓட்டிக் காவல் புரியும் எம்பால் அமைந்த அழகு யாது ; எமது மேனி புலால் நாறுவது காண்பாய்; ஆதலால் சென்றுவிடு; கடல் பொருள் கொண்டு வாழும் எமது சிறிய வாழ்க்கை நும் உயரிய வாழ்க்கைக்கு ஒத்ததன்று; எமது குடிக்கும் பெருமையுண்டு; நிரல் அல்லோர்க்கு நேர்படாமை ஆகிய செம்மை இயல்பும் எமக்குண்டு.. அறிக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக