ஞாயிறு, 8 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 18

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 18
ஐந்தாம் பத்து - பரணர்
இசைக் கருவிகள்
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழினிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப
பண் அமை முழவும் பதலையும் பிறவும்
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர்
பரணர். பதிற். 41 : 1 - 5
புணர்புரி நரம்பின் யாழ் – இசை தன்னிடத்தே பொருந்திய முறுக்கிய நரம்பினை உடைய யாழ்.அஃதாவது மத்தளத்தின் தாளத்தோடு பொருந்திய முறுக்கின நரம்பினை உடைய யாழ். வணர் அமையாழ்- யாழ் கோடு வளைந்திருத்தலின் வணர் அமை யாழ் என்றார். வணர் கோட்டுச் சீறியாழ் (புறநா. 155.) வணர் – வளைவு ; பழுநிய யாழ் – பண் முற்றுப் பெற்ற யாழ். முழவு – மத்தளம். பண் அமை முழவு – யாழ் இசையோடு இயைந்த  முழவாதலின் பண் அமை முழவு என்றார். பதலை – ஒருகண் மாக்கிணை – ஒரு பக்கத்தில் மாத்திரம் அடித்தற்குரிய ஒருவகப் பறை. தூம்பு – வங்கியம். கண் அறுத்து இயற்றிய தூம்பு – மூங்கிலின் கணுக்களை அறுத்துச் செய்யப்பட்ட நெடுந் தூம்பை.பெரு வங்கியம் இசைக் கருவி.
கலப்பையர் – காவடியில் கட்டிய முடிச்சு- கூத்தர்கள் ஆடல் துறைக்குரிய கருவிகளை – யாழ் முழவு முதலிய பல்லியங்களை( வாத்தியங்கள்) வைத்துக் கட்டப்பட்ட தூக்கு. கலம் – கருவி – கருவிகளைக் காவடியில் சுமந்து செல்லும் பை உடையோர் – கலப்பையர். 

1 கருத்து: