வியாழன், 12 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 25

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 25
காவிரி – இன்று அரிய செய்தி ; அன்று ?
மா மலை முழக்கின் மாண் கணம் பனிப்ப
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக்
காவிரி ………………………………..
                    பரணர். பதிற். 50 : 1 – 6

 பெரிய மலையின் கண்ணே ( குடகு மலை) இடியோசையால் விலங்கின் கூட்டங்கள் நடுங்கும்படி – காற்றோடு மயங்கிய விரைந்த துளிகளை ஆலங்கட்டியோடு சிதறி – கரும்பு தழைத்து நெருங்கிய வயல்களை உடைய நாடு வளம் மிகத் தரும்படி -  வளம் பொருந்திய சிறப்பினை
உடைய உலகத்தைப் பாதுகாத்து – நேர் கிழக்கே ஓடுகின்ற  நிறைந்த வெள்ளத்தை உடைய காவிரி. ( கால் – காற்று; கதழ் உறை – விரைந்து பெய்யும் மழை; அமல் – நெருங்கி வளர்ந்துள்ள; ஆலி – ஆலங்கட்டி ; செங் குணக்கு – நேர் கிழக்கு)
செங்குட்டுவன்
வட நாட்டிலுள்ள அரசர்கள் அஞ்சி ஒடுங்மளவுக்கு வெற்றி கொள்ளும் போர்வீரன் பெரும் படை உடையவன் . குட நாட்டரசன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்  ( கடல் பிறக்கு ஓட்டிய – கடலுக்கு அஞ்சாது – கடலைப் பின்னிடச் செய்த . ) இவன் “ பொற் கோட்டு இமயத்துப் பொருவறு பத்தினிக் கற்கால் கொண்டனன் “ சிலம்பு. 26: 253 -254 .தெய்வத் தன்மை பொருந்திய கண்ணகியின் உருவம் சமைத்தற் பொருட்டுக் கல் எடுக்க வேண்டிக் காட்டு வழியில் அம்பினைப் போன்று விரைந்து சென்று  இடையில் எதிர்த்து வந்த ஆரியத் தலவனை தோற்றோடச் செய்தவன்.
துணங்கை
பாண்டில் விளக்கு ஒளியிலே – முழவு ஒலித்துக் கொண்டிருந்தது; அதற்கேற்ப மகளிர் ஆடும் துணங்கைக் கூத்திற்கு ஆடவர் முதற்கை கொடுத்து மகளிரொடு துணங்கை ஆடுதல் (பதிற். 52.)
விறலியர் - தோற்றம்
பெரிய சந்துகளையுடைய  திரண்ட மூங்கிலைப் போன்ற தோளையும் ஏந்திய  எழுச்சியை உடைய குளிர்ந்த கண்களையும் எழுதப்பட்டாற் போன்று எழுதலையுடைய இளைய நகிலையும் பூந்தொழிலையுடைய துகிலை அணிந்த அல்குலையும் தேனீக்கள் பரவிய கூந்தலையும் மின்னுகின்ற இழையையும் கொண்ட விறலியர். ( பதிற்.54.)
பதிகம்
கெடல் அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை
கரணம் அமைந்த காசறு செய்யுட்
பரணர் பாடினார் பத்துப் பாட்டு

குட நாட்டு அரசனாகிய நெடுஞ்சேரலாதனுக்குச் சோழன் மகளாகிய மணக்கிள்ளி என்பவள் பெற்ற மகன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன் ஐம்பது ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான். 13/11/15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக