ஞாயிறு, 15 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 30 - 31

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 30 - 31
ஏழாம் பத்து – கபிலர்
பகுத்தறிவு உடையோன்
பொன்னின் அன்ன பூவின் சிறியிலை
புன்கால் உன்னத்துப் பகைவன் எம் கோ
கபிலர். பதிற். 61 : 5 -6
     பொன் போன்ற நிறமுடைய பூவினையும் சிறிய இலைகளையும் பொலிவற்ற அடிமரத்தினையும் உடைய உன்ன மரத்துக்குப் பகைவனாகிய எம்முடைய அரசன் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
உன்னத்துப் பகைவன் – நிமித்தம் (சகுனம்) பாராது பகை வென்றவன்.
 உன்னம் –  உன்னமரம் - நிமித்தம் பார்க்கும் மரம் ; தன் வேந்தருக்கு வெற்றி உண்டாகுமாயின் செழித்தும் ; தோல்வி உண்டாகும் காலமாயின் கரிந்தும் காட்டும் இயல்புடையது என்பது நம்பிக்கை.
பகைவரொடு போர் செய்யக் கருதி நிமித்தம் பார்த்தவழி உன்னம் கரிந்து காட்டியது அதனால் தனக்கு வெற்றியில்லை எனக் கருதித் தவிர்ந்திராது போர்மேற் சென்று பகைவரை வென்றான்; நிமித்தத்தைப் பொய்யாக்கியவன் ஆதலால் “ உன்னத்துப் பகைவன் “ என்றார்.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 31
வடவைத் தீ  - முகாக்கனி
 …………………. பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்
கபிலர். பதிற். 62 : 5 - 8
 பசிய தீப் பொறிகளை உடைய ஒளி பொருந்திய நெருப்பு ( ஊழியின் இறுதிக் காலத்தில்) சூரியன் பல உருவம் கொண்டது போன்ற மாயத்தோடு ஒளி திகழப் பெற்று உயிர்களுக்குப் பொறுத்தற்கு இயலாத மயக்கத்தைச் செய்தலோடு இலியைச் செய்து திரிகின்ற ஊழித்தீயின் தன்மையைக் கொள்ளுதற்குக் காரணமான கடிய திறலால்……..
  மடங்கல் - வடவைத் தீ ; கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரைகடந்து உலகை அழிக்காதபடி அதன உறிஞ்சி வற்றச் செய்வதொரு தீ – பெண் குதிரையின் தலை வடிவில் கடலின்கண் உள்ளதென்று கூறுவர்.  
( இக்கூற்றை அறிவியல் நோக்கில்  ஆய்க.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக