வெள்ளி, 27 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 7

பரிபாடல் – அரிய செய்தி - 7
முருகன் பிறப்பு – ஆறு வேறு உருவானவன்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி அமைய……
………………………………..
வடவயின் விளங்கு ஆல் உறை ஏழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்
…………………………………………….
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ்சுனைப்
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்
பெரும் பெயர் முருக நிற்பயந்த ஞான்றே.
கடுவன் இளவெயினனார். பரிபா. 5 :  22 – 54
சிவபெருமான் வெள்ளி பொன் இரும்பு ஆகிய  முப்புரம் என்னும் மூன்று மதில்களை அழித்தவன். சிவன் உமையம்மையோடு புணர்ந்து காமத்தை நுகர்கின்ற  திருமண நாளில்  அமையாத  புணர்ச்சியை  இந்திரன் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் தவிர்த்தான்.  இந்திரன் உனது புணர்ச்சியால் தோன்றிய கருவினை அழ்ப்பாயாக என்று வேண்டி வரம் பெற்றான் சிவன் வாய்மை தவறாது தனது கருவின் உருவினைச் சிதைத்து பல துண்டுகளாக்கி  இந்திரன் கையில் கொடுத்தான். இந்திரனிடமிருந்து அக் கருத்துண்டுகள் ஏழு முனிவர்கள் ஏற்றுக்கொண்டு தம் தவ வலிமையால் இக்கரு ஆறுமுகத்தை உடைய மைந்தனாகி அமரர் படைக்குத் தலவனாகும் என் அறிந்து – இக்கருத்துண்டங்களைத் தம் மனைவியர் உட்கொண்டு தம் வயிற்றில் கருவை வளர்த்தால் கற்புடைமைக்குப் பொருந்தாது என்று எண்ணி – அவற்றை வேள்வித் தீயில் இட்டனர்.
 வேள்வியில் கிடைத்த அவிப் பாகத்துடன் சேர்ந்த எச்சிலாகிய அவற்றை வானின் வட திசையில் உறையும் ஏழு மகளிருள் கடவுட் கற்பினை உடைய சாலினி நீங்கலாக ஏனைய அறுவரும் அப்பொழுதே உண்டனர்.
தம் கணவர் விரும்பியதாலே அம்மகளிர் உண்டதால் குற்றமற்றவராகிய கார்த்திகை மகளிர் அறுவரும் உன்னைத் தங்கள் வயிற்றில்  கருஅரவாகத் தாங்கி இமயமலையில் சரவணப் பொய்கையில் தாமரைப் பாயலில் ஒருசேர உன்னைப் பெற்றெடுத்தனர்.
(பிறனுடைய கருவைத் தம் மனைவியர் வயிற்றில் தாங்குதல் கற்புடைமைக்கு இழுக்கு என்று கருதித் தீயில் இட்டனர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக