பதிற்றுப்பத்து
– அரிய செய்தி – 37 - 38
எட்டாம் பத்து
– அரிசில் கிழார்
உறை – ஒற -
Hora – Hour
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவிந்தாங்கு
அரிசில் கிழார்
. பதிற். 71 : 3 - 5
வயலில் விளைந்த நெல்லை மகளிர் அறுத்து
- மிக நெருங்கிய காடாவிடும் களமாகிய போரடிக்கும்
நெற்களத்தில் சேர்ப்பர். அவற்றைப் பருத்த எருமைகளால் மிதிக்கச் செய்து செந்நெல்லை மரக்காலால்
அளத்தற் பொருட்டுக் குவித்து வைப்பர். ( அம்பணம்
– மரக்கால் ; அம்பண அளவை உறை – அறுபது மரக்கால் – ஓர் உறை ; அக் குவியலைப் பொலி என்பர்.
இந்த அறுபது அலகு கொண்ட உறை – திரிந்து ஒற – ஓறா – ஹவர் என்று மணியைக் குறித்ததாகப் புள்ளி என்னும் என் ஆய்வுக் கட்டுரையில் சுட்டியுள்ளேன்
- கண்டு தெளிக. )
கை விடுப்பு – தம் கையினின்று பிறருக்கு
விடுத்தல் – கைமாற்று என்பர். பசு தரும் பயன் பெற்று வாழ்பவர் ஆயர்- அவர்களின் தலைவன் கழுவுள் – ஊர்- காமூர் – இது பதினான்கு
குடி வேளிரால் அளிக்கப்பட்டதென்றும் கூறுவர்-அகநா. 135.
பதிற்றுப்பத்து
– அரிய செய்தி – 38
ஆழிப் பேரலை -
சுனாமி
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து
ஈண்டி
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
அரிசில் கிழார்
. பதிற். 72 : 8 - 11
எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக் காலத்தின் இறுதி
புகுகின்ற போது – நிலவுலகின் பாரம் நீங்க – நீரானது எங்கும் பரவும்படி வந்து நெருங்கும்
– அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும் – இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து
எழுகின்ற வெள்ளம் – எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு
சேர்ந்து பரவும்.
( ஊழியின் இறுதியில் உலகமெலாம் இருள்
பரவுமெனவும் கடல் பொங்கி எழுந்து நீரால் உலகத்தையே மூடுமெனவும் பின்னர் பன்னிரு சூரியர்களும்
வடவைத் தீயும் கிளர்ந்தெழுந்து இருளப் போக்கி நீரையெல்லாம் வற்றச் செய்யுமெனவும் நூல்கள் கூறும்.ஊழி பற்றிய குறிப்பு பரிபா.6; பதிற்.
28. துஞ்சல் உறூஉம் – இறந்துபடுதலைப் பொருந்தும் ; பகல் – ஊழிக்காலம் ; ஒராஅ – நீங்க;
ஞெமர – பரவும்படி .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக