வெள்ளி, 20 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 39 -40

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 39 -40
போர் ஒழிய வேண்டுவல்
கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய நின்
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன எனப் பல நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும்
 சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல் என
ஆங்கும் மதி மருளக் காண்குவல்
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே
அரிசில் கிழார் . பதிற். 73   :  15  - 21

கொல்லி மலைக்குத் தலைவ ! கொடியணிந்த தேரை உடைய சேரனே ! நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்களின் அளவைக் கடந்தவையென்று தாமே அறிய வேண்டியவராக இருந்தும் – யான் பல நாள் சென்று நின் பகைவரிடத்துச் சொல்லவும்  - அவர் அதனைத் தெளிய மாட்டாராயினர் – பிற சான்றோர் கூறக் கொள்வாரோ எனின் அச்சான்றோர் கூறவும் பகைவரது அறிவு மயங்கக் கண்டேன் – யான் எவ்வாறு அவர் மனம் தெளியும் வண்ணம் உரைப்பேன் என்று வருந்துவேன் – இதனை அறிந்து அவர்பால்  நீ அருள் செய்தல் வேண்டும்.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 40
ஒழுக்கமுடையோர் பேறு பெறுவர்
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு …
அரிசில் கிழார் . பதிற். 73   :  25  - 26
பிறர்க்குக் கொடுத்தலும் மாட்சிமையுடைய குணங்களும் செல்வமும் பிள்ளைப் பேறும் தம்மால் வழிபடப் பெறும் தெய்வமும்  மற்ற எல்லா நற்பேறுகளும் தவமுடையோர்க்கு உரியன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக