வெள்ளி, 13 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27
ஆறாம் பத்து – காக்கைபாடினியார் நச்செள்ளையார்
இறக்குமதி
இன் இசைப் புணரி இரங்கும் பெளவத்து
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்
கமழும் தாழைக் கானல் அம் பெருந்துறை
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந.
காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.55 : 3 - 6
 இனிய ஓசை உடைய  அலைகள் ஒலிக்கும் கடல் வாயிலாக வந்த நல்ல ஆபரணங்களாகிய செல்வம் தங்கும் பண்டகசாலைகளை உடையதும் மணம் வீசுகின்ற தாழை மரங்கள் பொருந்திய கடற்கரைச் சோலைகள்  - அழகிய பெரிய துறைகள் உடையதுமாகிய குளிர்ந்த கடல் பக்கத்தே விளங்கும் நல்ல நாட்டிற்கு உரிய ஒப்பற்றவனே( ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 27
வஞ்சினம்
 இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம் அல்லேம் புகா எனக் கூறி
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
 காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.58 : 5 - 8
இன்று இனிதாக உண்டோம் – நாளை அரைத்த  மண்ணால் கட்டப்பட்ட இஞ்சியை உடைய மதிலைக் கடந்தால் அல்லாமல் உணவை உண்ண மாட்டோம்.என்று வஞ்சினம் கூறித் தாம் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ற வினை செய்யக் கருதிய வீரர்களை உடைய பெருமை உடையவன் வானவரம்பன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக