சனி, 14 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 28 - 29

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 28 - 29
மாசி மாதம்
பகல் நீடு ஆகாது இரவுப் பொழுது பெருகி
மாசி நின்ற மா கூர் திங்கள்
பனிச் சுரம் படரும் பாண்மகன் …….
 காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.59 : 1 - 3
பகல் பொழுது நீளாது  இரவுப் பொழுது மிக்கு விளங்குகின்ற மாசி மாதத் தன்மை நிலைபெற – மாக்கள் எல்லாம் குளிரால் உடம்பு நடுங்குகின்ற மாதத்தில் பனி பெய்யும் அரிய வழியிலே செல்லும் பாணன்…
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 29
மரம் படு தீங்கனி
மிஞிறு புறம் மூசவும் தீஞ் சுவை திரியாது
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி
காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற். 60  : 4 - 5

நறு மணத்தால் வண்டுகள் புறத்தே மொய்க்கவும் – தம் இனிய சுவை மாறுபடாத – அரிவாளும் பிளத்தற்கு இயலாத மரங்களில் விளைந்த அழகிய சாறு நிரம்பிய – முட்டை போல் வடிவான முதிர்ந்த இனிய பழங்கள் …. மரம் படு தீங்கனி – பலாப் பழம் என்பர். உரையாசிரியர் உ.வே. சா. அவர்கள் விளாம்பழம் என்பார். ஆசிரியர் அருளம்பலவனார் அவர்கள்  சுவைக் காய் நெல்லி என்பார்.( வண்டு மொய்த்தலால் – மரம் படு தீங்கனி – பலாப்பழம் எனக் கொள்ளலாம் – ஆய்க.)
பதிகம்
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
குட நாட்டின் தலைவனாகிய நெடுஞ் சேரலாதற்கு வேளாவிக் கோமான் மகளாகிய தேவி பெற்ற மகன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன். இவன் முப்பத்தெட்டு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக