வியாழன், 26 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 5 -6

பரிபாடல் – அரிய செய்தி – 5 -6
உலகத் தோற்றம்
மாநிலம் இயலா முதன்முறை அமையத்து
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே
கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 91 – 94
ஆதி ஊழியின்கண் நீரினூடே பெரிய நிலம் தோன்றாத காலத்தே – அச்சந்தரும் அப் பெரிய வெள்ளத்தின் இடையே தோன்றியதும் –  வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரமனோடு மலர்ந்ததுமாகிய உந்தித் தாமரையை உடையோனே ! நினது நேமியே உலகிற்கு நிழலானது.

பரிபாடல் – அரிய செய்தி - 6
உலகத் தோற்றம்
புருவத்துக் கருவல் கந்தத்தால்
தாங்கி இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினொடு ஒக்கும்
கடுவன் இளவெயினனார். பரிபா. 4 :  22 – 24
பண்டை நாளிலே இந் நிலம் வெள்ளத்தில் மூழ்கியபொழுது – நீ பன்றியாகி வன்னையுடைய கழுத்தாலே தாங்கி – இவ்வுலகத்தை மேலே கொணர்ந்து திருத்திய செயல் – நிலத்தின் நடுவே நின்று அதனைத் தாங்கி- உயர்ந்த  பலரானும் புகழப்படும் மேருவின் செயலை ஒக்கும்.
( உலகத்தோற்றத்தின் முதல் நிலையாக இமயம் தோன்றியது ஈண்டுச் சுட்டப்படுதல் கொண்டு நிலத் தோற்றம் அறிவியல் ஆய்வு நோக்கில் அமைந்துள்ளது – ஆய்க.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக