சனி, 28 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 8

பரிபாடல் – அரிய செய்தி - 8
வையை நீர் - புதுப் புனலாடல்
புது வெள்ளம் பாய்ந்துவரும் வையை ஆற்றில்
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும் யாறு வரலாறு
நல்லந்துவனார். பரிபா. 6 : 41 – 42
புதுப் புனலில் நீராட இளையோர் செல்ல அரிதாயும் ; மெலியோர் புகுந்து செல்ல இயலாதாயும் ; வலியர் புகுந்து நீராடுதலால் அவர்கள் அணிந்த மண நீரும் சந்தனம்முதலியவற்றின் குழம்பும் நறுமண எண்ணெயும் சூடிய பூக்களும் மணக்கும்படி வையை ஆற்றின் நீரோட்டம் நிகழும்.
விளக்கம்:
சாறு – மண நீர் ; பத்துவகைத் துவரினும் ஐந்து வகை விரையிலும் முப்பத்திருவகை ஓமாலிகையிலும் ஊறிய நீர்.
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையினும்
ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் .. என்றார் இளங்கோவடிகள்.
பத்துத் துவர் – “ பூவந்தி திரிபலை புணர் கருங்காழி நாவலொடு நாற்பான் மரமே” என்பன.
ஐந்து விரை – கோட்டம் துருக்கம் தகரம் அகில் சந்தனம் என்பன
முப்பத்திரண்டு ஓமாலிகையாவன –
” இலவங்கம் பச்சிலை கச்சோலம் ஏலம்
குலவிய நாகனங் கொட்டம் – நிலவிய
நாகமதா வரிசி தக்கோலம் நன்னாரி
வேகமில் வெண்கோட்டம் மேவுசீர்
போகாத கத்தூரி வேரி யிலாமிச்சம் கண்டில்வெண்ணெய்
ஒத்தகடு நெல்லி உயர்தான்றி துத்தமொடு
வண்ணக் கச்சோலம் அரேணுக மாஞ்சியுடன்
எண்ணும் சயிலேக மின்புழுகு  - கண்ணுநறும்
புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம்
பின்னு தமாலம் பெருவகுளம் – பன்னும்
பதுமுகம் நுண்ணேலம் பைங்கொடு வேரி
கதிர்நகையா யோமாலிகை “ என்னுமிவை.
(இவற்றுக்கு அகராதியிலும் பொருள் காண்டல் அரிதாயிற்று – மூலிகை ஆய்வாளர்களிடத்துப் பொருள் அறிந்து கொள்க. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக