வியாழன், 18 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 11

 பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 11
நெற்போர்
கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன
பைதற விளைந்த பெருஞ் செந்நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்குசினை நீழல்
பலிபெறு வியன்களம் மலிய ஏற்றி
கணம்கொள் சுற்றமொடு கைபுணர்ந்து ஆடும்
துணங்கை அம்பூதம் துகில் உடுத்தவைபோல்
சிலம்பி வால்நூல் வலந்த மருங்கின்
குழுமுநிலைப் போரின் முழுமுதல் தொலைச்சி
பக்டு ஊர்பு இழிந்த பின்றை துகள்தப
வையும் துரும்பும் நீக்கி பைதற
குடகாற்று எறிந்த குப்பை வடபால்
செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்
       கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 229 - 241

கடுப்புவலியைத் தருகின்ற குளவிக் கூட்டத்தை ஒத்த – பசுமை நீங்கி முழுதும் முற்றிய பெரிய செந்நெல் தாளை அறுத்த உழவர்கள் – பாம்புகள் கிடக்கின்ற  மருத மரத்தின் நிழலிடத்தே – பிச்சை பெறுவதற்கு இடனான அகன்ற களங்கள் நிறையும்படி போராகக் குவித்து வைக்கின்றனர். குவித்துவைக்கப்பட்ட நெற்குவியல் – கைகளைக் கோர்த்துத் துணங்கை ஆடும் பூதங்கள் வெண்மையான துகில் உடுத்து நின்றாற் போல -  சிலந்தியின் நூல் பின்னப்பட்டு நிற்கின்றது. பெரிய போர்களிடத்தே நெற்கதிர் கட்டுகளை வாங்கி  கடா அடித்து -  நெல்லின்கண் தூசு துரும்பு போக்கி -  காற்றிலே தூற்றிக் குவித்த நெற்பொலிகள் – வடதிசைக்கண் உள்ள பொன்போன்ற மேருமலை போன்று தோற்றமளிக்க….
( செங்குளவி போன்ற பெரிய நெல் ;  பாம்பு உறை  மருதின் – எலிஒழிப்பு ; பலிபெறுதல் – களத்தில் வந்து பாடும் இரவலர்க்கு நெல் வழங்குதல் ;  பலி பெறும் களம் -  ஆண்டூறையும் தெய்வங்கள் பலி பெறுகின்ற களம் என்பார் நச்சினார்க்கினியர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக