திங்கள், 22 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 15

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 15

கள் ஆக்குதல்
அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவின் புலர ஆற்றி
பாம்பு உரை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின்  வழச்சு அற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவீர்
     கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  275 – 282



குற்றாத கொழியல் அரிசியை நல்ல களியாகத் துழாவி அட்ட கூழை , மலர்ந்த வாயையுடைய தட்டுப் பிழாவில் இட்டு உலரும்படி ஆற்றிப் பாம்பு கிடக்கும் புற்றின்கண் கிடக்கும்  பழஞ்சோற்றைப் போன்று பொலிவு பெற்ற புறத்தையுடைய நல்ல நெல் முளையை இடித்து அதனை , அதிலே கலந்து – அஃது இனிமை பெறும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து – வலிய வாயினையுடைய  சாடியில் இட்டு,  வெந்நீரில் வேக வைத்து  நெய்யரியாலே வடிகட்டி,  விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நறிய கள்ளைப்  பச்சைமீன் சூட்டோடு, நடந்து சென்ற வருத்தம் நீங்க  உண்ணப் பெறுவீர்.
 ( அவையா – குற்றாத  ; துழவை – கூழ் ; பிழா – தட்டு ; குரும்பி – புற்றாஞ்சோறு ; தண்மீன் – உயிர்மீன் .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக