ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 21

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 21
பொற்றாமரை
ஆடுவண்டு இமிரா அழலவிர் தாமரை
நீடுஇரும் பித்தை பொலியச் சூட்டி
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு
புனைஇருள் கதுப்பகம் பொலிய பொன்னின்
தொடைஅமை மாலை விறலியர் மலைய
                       கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 481 – 486
இளந்திரையன் கொடை :  இருண்ட வானத்தின்கண் திங்கள் போன்று, வண்டுகள் மொய்க்காத , தீயிடத்தே கிடந்து மலர்ந்த வெண் பொற்றாமரையை, நீண்ட கரிய மயிரிடத்தே அழகு பெறச் சூட்டி, வலிய கடலின் நீரை முகந்து கொண்ட முகிலினின்றும் பகற்காலத்தே பெய்யும் மழைத்துளி ஊடே மின்னல் ஓடினாற் போன்று, ஒப்பனை செய்யப்பட்ட கூந்தல் அழகுறும்படி பொன்னாற் செய்து தொடுத்தல் அமைந்த மாலையை விறலியர் சூடத் தருவான் மன்னன்.
பண்டைய நாளில், தம்மை நாடிவந்த பாணர்க்குப் பொற்றாமரை மலரையும், விறலியர்க்குப் பொன் மாலையையும் பரிசிலாகத் தருவது மன்னர்களது வழக்கம். மேலும் காண்க:
“ அழல் புரிந்த அடர்த் தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்
பாறுமயில் இருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாண்மகிழ் இருக்கை – (புறநா.29: 1-5)
( மங்குல் – இருள்திசை ; அழலவிர் தாமரை – தீயில் புனைந்த பொற்றாமரை ; நீடு இரும்பித்தை – நீண்ட கரிய மயிர் ;  உரவுக்கடல் – வலிய கடல் ; விறலியர் – விறல்பட ஆடும் மகளிர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக