வியாழன், 11 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 4

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 4
அதனதன் இடத்தில்…
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி
கைப்பொருள் வெளவும் களவுஏர் வாழ்க்கைக்
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறாது தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா
வேட்டுஆங்கு அசைவழி அசைஇ நசைவுழித் தங்கி
சென்மோ இரவல சிரக்க நின் உள்ளம்
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4 :39 - 45
வழிச் செல்வோர் அலறும்படி தாக்கி அவர்களுடைய கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் களவினை – ஏர்த்தொழில் போன்று வாழ்க்கைக்குத் தொழிலாகக் கொண்டுள்ள கொடுமையோர்  திரையன் நாட்டில் இல்லை. ; அவன் நாட்டில் இடி கூட இடித்து இடுக்கண் தராது- பாம்புகளும் கொல்லும் தொழிலைச் செய்யா -  காட்டு விலங்குகள் கூட யாருக்கும் வருத்தம் செய்ய மாட்டா -  ஆதலால்,   அறம் திகழும் அவன் நாட்டில்  நீங்கள்  விரும்பிய இடத்து அச்சமின்றி இளைப்பாறி – நின்னை விரும்பியோரிடத்து நீ செல்வாயாக – உன் நெஞ்சம் இன்புற்றுச் சிறக்குமாக. அதனதன் இடத்தில்  இருப்பதால் யாண்டும் அமைதி நிலவுகிறது  -- சிலம்பில் இளங்கோவடிகள் இக்கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம் –
“ கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா
வாள்வரி வேங்கையும் மான்கண மறவா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு.

 ( அத்தம் – வழி ; உரும் – இடியேறு ; உரறுதல் – முழங்குதல் ; அசைவழி -  இளைத்தவிடத்தே ; அசைஇ – இளைப்பாறி ; நசைவழி – நும்மை விரும்பிய விடத்தே. இன்று,  இயற்கையை இடறும் மூடர்கள் உணர்வார்களாக.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக