ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 7

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 7
எயிற்றியர் ஆக்கிய உணவு
பார்வை யாத்த  பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று
 வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
 வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 95  - 100
குடிசை முற்றத்தில் விளா மரத்தின் நிழலில், அதன் தேய்ந்த தாள்களில் பார்வை மான்கள் கட்டப்பட்டிருக்கும் ; அம்முற்றத்தில் நிலத்தில் பதிக்கப்பட்ட குழிந்த உரலில், எயிற்றியர் தாம் கொணர்ந்த புல்லரிசியைப் பெய்து, குறிய வயிரமேறிய உலக்கையால் அதைக் குற்றி எடுத்து, ஆழ்ந்த கிணற்றில் அமைந்த சில்லூற்றைத் தோண்டி உவரி நீரைக் கொண்டுவந்து, பழைய விளிம்பு உடைந்துபோன  பானைகளில் வார்த்து, உலையை முரிந்த அடுப்பில் ஏற்றி,  சோறு சமைக்கின்றனர்.
( பார்வை மான் – பிற மான்களை ஈர்த்து வேட்டையாட வளர்க்கும் மான் ;  முரவு வாய்க் குழிசி -  மூளிப்பானை ;  உவரி நீர் – கொஞ்சமாகக் கிடைத்த நீர் ; ஓச்சி – குற்றி ;  வாடூன் புழுக்கல் – கருவாட்டோடு கூடிய சோறு ;  வாராது அட்ட – அரிசியைக் கழுவாது உலையில் பெய்து. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக