திங்கள், 1 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 11

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 11
 நல்லியக்கோடன்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோந்தாள்
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம் போக்கறு மரபின்
தொல்மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல்மா இலங்கை மன்ன ருள்ளும்
முறுவின்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்து கழல்தயங்கு திருந்தடி
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லையக் கோடனை நயந்த கொள்கையொடு
 இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 113  – 126
ஏழு வள்ளல்களும் ஏற்று நடத்திய  கொடையை --- உலகம் விளங்கும்படி தான் ஒருவனே ஏற்ற வலிமைமிக்க முயற்சியை உடையவன் நல்லியக்கோடன் ; சுரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும் நீராடு மகளிர்க்குத் தெப்பமாக நீர் கொணர்ந்து தருகின்ற அழிதல் இல்லாத முறைமையினை உடைய பழம்பெருமை வாய்ந்த  பெரிய இலங்கையின் பெயரைத் தான் தோன்றியபோதே பெற்ற நல்ல இலங்கை என்னும் நகரை ஆண்ட மன்னர் பலருள்ளும் சிறந்தவன் அவன். வாள் வென்றி வாய்க்கப் பெற்றோரும் புலி போல்வோரும் ஆகிய ஓவியர் குடியில் தோன்றியவன் ; திருந்தடியையும் வரையாது அள்ளி வழங்கும் மழை போன்ர தடக்கையையும் உடையவன்; கூத்தரைப் போற்றுவதில் வல்லவன் ; பேரிசையாளன் – ஆகிய நல்லியக்கோடன் என்னும் வள்ளல் பெருமானை..
   நல்லியக்கோடன் – ஆட்சி செய்த ஓய்மாநாட்டின்கண் எயிற்பட்டினம் – வேலூர் – ஆமூர் – என்னும் ஊர்கள் அக்காலத்தே சிறப்புற்று விளங்கின. கிடங்கில் – தலைநகரமாக விளங்கியது.
 ( உரனுடை வலிமைமிக்க ;நாகம் – சுரபுன்னை ;  போக்கறு -  அழித்தற்கு இயலாத.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக