செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 12 வறுமை

  சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 12
 வறுமை
……  ……………….. ………… இந்நாள்
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கை கிணைமகள் வளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்வீட ……………….
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 130  – 140

அண்மையில் குட்டிகளை ஈன்ற நாய் – தன் குட்டிகளிடத்தும் பெரிதும் அன்புடையதாய் இருந்தும் – கண்களைத் திறவாத சாய்செவிக் குருளை பால் மிகுதியாக உண்ணாது எனினும் அவற்றிற்குக் கூடப் பாலூட்ட முடியாத வற்றிய முலை உடைய நாய் குரைக்கின்ற புன்மையுடைய அடுக்களை ;  கூரையில் உள்ள கழிகள் கட்டற்று வீழ்ந்து கிடக்கும் பழைய சுவர் ; அச்சுவரில் தோன்றிய கறையான் அரித்துச் சேர்த்த புழுதியிடத்துக் காளான் பூத்து விளங்கும் அட்டில் ; இத்தகைய வறுமையால் இளைத்த உடலை உடைய நுண்மருங்குல் கிணைமகள் கடும்பசிக்கு ஆற்றாது குப்பையில் கிடந்த வேளைக் கீரையை நகத்தால் கிள்ளி வந்தாள் ; சுவை பயத்தற்கு இடும் உப்பும் இல்லாத வறுமை ;  உப்பின்றி அட்டிலிலே பக்குவம் செய்த கீரையை – புறங்கூறுவோர் காணுவதை நாணித் தலை வாயிற் கதவை அடைத்து எம் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டோம்.
( ஒல்குபசி – ஐம்பொறிகளும் தளர்தற்குக் காரணமான பசி ; கிணைமகள் – கிணைப்பறை கொட்டுவோன் மனைவி – மனைவியை மகள் என்று கூறும் வழக்கு .)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக