வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 40 : 10. நோக்கு

தொல்தமிழர் அறிவியல் – 40 : 10. நோக்கு

10. நோக்கு

நோக்குகாதல் பார்வை.
                              ”நோக்கு-தல் ; கூர்ந்து பார்த்தல் ; சிறப்பாய்க் கருதுதல் ; விரும்புதல் ; அணுகுதல் (to see ; look at; behold; view)”
மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே.
    --தொல்.பொரு.409
                                தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாக நோக்கு என்பதைக் குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர்மாத்திரை முதலாக அடிநிலை யளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும் என்றவாறு.
                     அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கு நிலை. அடிநிலைகாறும் என்றதனான் ஓரடிக்கண்ணும் பலவடிக்கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒரு நோக்காக ஓடுதலும் பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூன்று வகைப்படும்என்று கூறுவார்.
 இதனால் நோக்கு என்றது முற்று முழுதாக ஒன்றினைப் பார்ப்பது; (ஆராய்வதுஈடுபாடு கொள்வது)
அதனாலன்றோ ஆன்றோர் நோக்கு என்னும் பார்வையைக் காதல்  மொழியாகக் கண்டுள்ளனர்.

                                        காதல் பிறப்பது கண்கள் வழியே. ஆணும் பெண்ணும்  நேரெதிர் பார்வை பரிமாற்றம் காதல் பிறக்கும் களமாகும்  என்பதை சப்பான் ஆய்வாளர்கள் அறிவியல் வழி மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றார்கள். ஒத்த பருவம் அமைந்த பருவத்தினர் காதல் வயப்படுதல் எவ்வாறென இவ்வாய்வு விளக்குகிறது. பருவத்தினர் பார்வைகள் ஆயிரம் இருந்தும் குறிப்பிட்ட ஒரு பார்வை மூளையில் தாக்கத்தை ஏற்படுத்திக் காதலை மலரச் செய்கிறது.

                          இவ்வறிவியல் உண்மை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது. குறிப்பாகத் திருவள்ளுவர் இவ்வறிவியல் உண்மையை இன்பத்துப்பாலில் மிக விரிவாக எடுத்துப் பேசுகின்றார். திருவள்ளுவர் அன்றே அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்தார் என்று சொல்லவில்லை ;   அறிவியல் சிந்தனைத் திறம் கொண்டிருந்தார் என்றே சொல்கின்றோம் ; இன்று அவ்வறிவியல் சிந்தனை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு டாவின்சியின் ஓவியங்கள் இன்று அறிவியல் ஆக்கம் பெற்றனவோ அதேபோல் திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனைகள் உலகம் ஒப்புக்கொள்ளுமாறு மெய்ப்பிக்கப்படும்.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து. 1082
                        இப்பெண் எனது பார்வைக்கு எதிராகப் பார்த்தல்தானே வருத்துகின்ற இப்பெண் சேனையையும் கொண்டுவந்த தன்மையினை உடைத்து.

கண்ணொடு கண்ணினண நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில. 1100
 காதலர் இருவருடைய கண்கள்  நோக்கால் ஒக்குமாயின் அவர்கள் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடையன அல்லவாம். ----தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக