திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 64 : 22. நெல்லிக்கனி

தொல்தமிழர் அறிவியல் – 64 : 22. நெல்லிக்கனி

”………………… நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீத் தனையே
                                            --ஒளவையார், புறநா. 91 : 7 -11
                            அதியமான் நெடுமானஞ்சியை நோக்கி … “ நீ, பழைய நிலைமையையுடைய பெரிய மலையிடத்து விடரின்கண் அரிய உச்சிக்கண் கொள்ளப்பட்ட சிறிய இலையினை யுடைய நெல்லியின் இனிய பழத்தைப் பெறுதற்கரிதென்று கருதாது அதனாற் பெறும் பெரும் பேற்றினை எமக்குக் கூறாது நின்னுள்ளே அடக்கிச் சாதல் ஒழிய எமக்கு அளித்தாயாதலால்
இனிய கனிகளென்றது ஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை…” – குறள். 100, பரிமேலழகர் உரை.

”…………………….. மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகனும் ……..”
-----இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 99 – 103
                            பெரிய மலையினது சாரலில் நின்றுஅழகுபெற்ற நெல்லியினது அமிழ்தத் தன்மையுடைய கனியைத் தான் நுகர்ந்து ; தன் உடம்பிற்கு ஆக்கம் செய்து கொள்ளாமல் ஒளவைக்குக் கொடுத்தவனும்கொற்றவையின் சினம் திகழும் ஒளிமிக்க வேலையும் ஆரவாரிக்கின்ற கடல்போன்ற படையினையும் உடைய அதிகன் என்னும் வள்ளலும்……
சாத்திடை வழங்காச் சேட்சிமை யதர
சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
உதிர்வன …………………
  -பாலை பாடிய பெருங்கடுங்கோ., அகநா. 291. 15 - 17
உயர்ந்த மலையுச்சிகளை யடுத்த நெறிகளிடத்தவாய, சிறிய இலையினையுடைய நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்கள், உதிர்ந்து பரந்து கிடக்கும் காட்டில்….
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி    
மரையின மாரு முன்றிற்    
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே
                                                  -மாயேண்டன், குறுந். 235 : 3-5
                           வாடைக் காற்றே, நெல்லிக்காயைமரையின் திரள்உண்ணுகின்ற முன்னிடத்தை உடைய,  -புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடையநல்ல தலைவியினது ஊரானதுபாம்பின் நாலுகின்ற உரியை ஒக்கும், தூய வெள்ளிய அருவியை உடைய,மலையின் உயரத்திலே பொருந்தியது; அங்கேயுள்ள தலைவியை நீ பாதுகாப்பாயாக நீ வாழ்வாயாக! …
நெல்லிக்காய்
 நெல்லிக்காயை மரையினம் உண்ணுதல்: ----குறுந். 317:1-2 ; பராரை நெல்லி யம்புளித் திரள்காய், கான மடமரைக் கண நிரை கவரும்”, “பல்கோள் நெல்லிப் பைங்கா யருந்தி, மெல்கிடு மடமரை --அகநா.69:7-8, 399:14-15 ;மரைபிரித் துண்ட நெல்லி வேலி --புறநா. 170:1.

வரிமரல் வாடிய வான்நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோட்சுரம் நீந்தி
நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
பல்காய் அம்சினை அகவும் அத்தம்
சென்றுநீர் அவணிர் ஆகி நின்றுதரு
நிலைஅரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே
    -காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் அகநா. 271 : 4 – 10
                   
  வாடிய மரற்செடிகளையும் மழைபெய்யாது வறண்டுபோன இடத்தையும் உடைய சிறிய குன்றுகளை அடுத்துள்ள ; ஆறலை கள்வரும் கொடிய விலங்குகளும் தீங்கு செய்யும் அரிய சுர வழிகளை நெடுந்தூரம் கடந்து செல்லும் நீர் வேட்கைமிக்க வழிப்போக்கரின் செல்லும் உயிரைச் செல்லவொட்டாது தடுத்து நிறுத்தும் சுவைமிக்க காய்களைக் கொண்ட நெல்லி மரத்தின் அழகிய கிளைகளிலிருந்து ஒலி செய்யும்.. அத்தகைய காட்டு வழியில் நீவிர் சென்று…..பெரும் பொருளை ஈட்ட நினையீராயின் நும் முயற்சி வலிமை பெறுவதாக.------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக