செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 65: 22. நெல்லிக்கனி
                    பாலை நிலத்தில் இது ஓர் உயிர்காக்கும் உணவாகும். காட்டில் நிலவும் கடுங்கோடையில் வழிச்செல்வோர் குடிப்பதற்கு நீரின்றி கானல் நீரை நோக்கி ஓடி, உடலில் நீர்வற்றி இறந்துபோதல் உண்டு. அந்நிலையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வழியில் கிடைக்கும் நெல்லிக் காயை வாயில் அடக்கிக் கொண்டு  உயிர் பிழைப்பர். அதனாலன்றோ இக்கனியைச் சாவா மருந்து  என ஒளவையார் புகழ்ந்துரைத்தார்.
                          நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்……………………….
வளரியல்பு
                    நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய்.
                          மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள்மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
அடங்கியுள்ள சத்துக்கள்
·        புரதம் – 0.4 கி
·        கொழுப்பு – 0.5 கி
·        மாச்சத்து – 14 கி
·        கால்சியம் – 15 மி.கி
·        பாஸ்பரஸ் – 21 மி.கி
·        இரும்பு – 1 மி.கி
·        நியாசின் – 0,4 மி.கி
·        வைட்டமின் ´பி1` - 28 மி.கி
·        வைட்டமின் ´சி` - 720 மி.கி
·        கலோரிகள் - 60
·          
·         இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது.[சான்று தேவை]…தொடரும்.....

2 கருத்துகள்:

  1. இலக்கியங்களில் நெல்லிக்கனி என்று குறிப்பிடப்படுகிறதே. நாம் வழக்கமாகக் கூறும்போது நெல்லிக்காய் என்றேதான் கூறுகிறோம். இரண்டும் சரியா ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லி காய்தான் கனிவதில்லை அதன் அருமை நோக்கிக் கனி என்பர். தேங்காய் முற்றினாலும் காய்தான். அவ்வாறே (குறும்பை, இளநீர் தேங்காய்)..! தெங்கின் பழம் என்னும் வழக்கும் உள்ளது நெல்லிக்காய் பழுப்பதில்லை, முற்றினாலும் சுவை குன்றாது. காயைக் கனி எனக்கொண்டது அருமை நோக்கியே..! நன்றியுடன்..

      நீக்கு