திங்கள், 7 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –106 : 36. ஆளிநன்மான்

தொல்தமிழர் அறிவியல் –106 :  36. ஆளிநன்மான்

36. ஆளிநன்மான்

ஆளி- யானையை வீழ்த்தும், ஆளி-யாளி-சிங்கம்
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து
ஆளி நன்மான் வேட்டெழு கோள் உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்
துன்னருங் கானம் ……………………..
         -இளநாகனார். நற். 205: 1 – 5
                 அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் ஆளி என்னுமொரு விலங்கு திரியும். அது கொல்லவல்ல நகங்களையும் அழகிய கோடுகளையும் உடையதாய் விளங்கும். புலியால் கொல்லப்பட்டதும் கூரிய நுனியுடன் தலையில் தாங்கிய வெண்ணிறத்  தந்தம் உடையதுமான வலிய களிற்றியானையை இரை எனக்கொள்ளும்.யானையை ஆளி இழுத்துச் செல்வதும் பிறர் நெருங்குதற்கு அரியதுமான காடு…..

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ....
                                           --நக்கண்ணையார், அகம். 252 : 1-4
                           அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
                 வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

 ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்......
                            --மதுரை இளங்கெளசிகனார், அகநா. 381 : 1 – 4
                     ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த, அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.
                        
                      ஆளி- சிங்கத்தில் ஒருவகை. ஒருத்தல் – ஆண் ஆளி. “ ஆளியானது யானைக் கொம்பைப் பறித்து உண்ணும் என்பது “ முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி, யானைத் தலை நிலம் புரள வெண்டுகோடு உண்டதே போன்று” சீவக.: 2554: 1-2.

                  ஆளி யானையைக்கொன்று அதன் கொம்புகளைப் பறித்து உண்ணும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த விலங்காகக் குறிக்கப்படுகிறது. ஆளியைக்கண்டு புலியே அஞ்சும் என்றும் சுட்டப்படுகின்றது. ஆளி இரையைக் கொல்ல வல்ல நகங்களைக் கொண்டதாகவும் அழகிய கோடுகளைக் கொண்டதாகவும் இருக்கும் என்றும் காட்டில் வாழும் விலங்கு என்றும் இவ்விலங்கு பற்றிய குறிப்புகளைக் கொண்டு இன்று இத்தகைய விலங்கு எங்கும் இருப்பதாக தகவல் இல்லை. கோயில் சிற்பங்களில் ஆளியின் உருவம்  இடம்பெற்றிருப்பதாகக் கூறுவர். எனினும் அவ்வுருவம் கற்பனை வடிவமாகத் தோன்றுகிறது.
                        சான்றோர் செய்யுட்களில் ஆளியின் ஆற்றல் வடிவம் வாழிடம் ஆகியன தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதனைக் கற்பனை என்று கருதுவதற்கு இடமில்லை. சங்க காலத்திற்குப் பின் ஆளி பற்றிய கதைகள் பன்னெடுங்காலமாக மக்களிடையே புழக்கத்தில் இருந்துள்ளன; அக்கதைகளின் அடிப்படையில் ஆளியின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனலாம்ஆளி . வாழ்ந்து அழிந்துபோன விலங்கினமாக இருக்கக்கூடும். ------தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக