வெள்ளி, 25 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –121 : 41. பண்டைய துறைமுகங்கள்

தொல்தமிழர் அறிவியல் –121 : 41. பண்டைய துறைமுகங்கள்

கடற்போர்
கடற்படை அடல்கொண்டி
மண்டுற்ற மலிர் நோன்தாள்
தண் சோழ நாட்டுப் பொருநன்
                                                     ---கோவூர் கிழார், புறநா. 382 : 1-3
                     கடற்போரில் பகைவரை வென்று கொண்ட பெரும்பொருள் நெருங்கிப் பெருகிய ஊற்றம் மிக்க வலிய தாளை உடைய தண்ணிய சோழரது நாட்டில் வாழும் பொருநன்.

வெண்கல் அமிழ்தம்

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்.
 – மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார், அகம். 207: 1-4
                            
                          தெய்வம் உறையும் கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து, நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினைப் படைக் கலன்களைக் கையிற் கொண்டெழுந்த வீரச் செயல்கள் புரியும் உமணர்கள் மூட்டைகளாக அடுக்கி, வெண்ணிறக் கழுத்தினைக்கொண்ட கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு , நிமித்தம் பார்த்தவராய் ; அவற்றை மேற்குத் திசைகளில் உள்ள இடங்களுக்குக் கொண்டு செல்வர்

உப்பு வணிகர்

எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்
அரும்பொருள் அருத்தும் திருந்துதொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு
பொருகணை தொலைச்சிய புன்தீர் மார்பின்
விரவுவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள்
வரைஊர் பாம்பின் பூண்டுபுடை தூங்க
கரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவு உடை
கருவில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள்
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
  --கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 66  - 76
              
                         உப்பு வணிகர்கள் ஊர்கள்தோறும் செல்லும் நெடிய வழியில் பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாகமலையில் உள்ளனவும் கடலில் உள்ளனவுமாகிய பயனைக் கொடுத்துப் பெறுதற்கரிய பொருளைப்பெற்றுத் தம் சுற்றத்தாரை நுகரப்பண்ணும் வணிகர்கள் செல்கின்றனர்அவர்கள் திருந்தத்தொடுத்த தம் வினையின்கண் அசைவில்லாத வலிய முயற்சியைஉடையவர்கள்தம் கால் மறையும்படி செருப்பு அணிந்தவர்கள்மெய்ப்பை அணிந்த உடம்பினை உடையவர்கள்ஆறலைப்போர் அம்புதொடுத்துப் போர் செய்ய வரின் அவரை எதிர்த்துஅவரது வலியைத் தொலைத்த மார்பினை உடையவர்கள்மலையில் ஊறும் பாம்பைப் போன்று மார்பின்குறுக்கே கிடக்கும் கச்சின்கண் வெள்ளிய கைப்பிடியை  உடைய ஒள்ளிய வாளினைத் தொங்கவிட்டவர்கள்உடைவாள் செருகப்பட்டு இறுகிய உடையினை உடையவர்கள்வலிய தோளினை உடையவர்கள்கடம்பின்கண் அமர்ந்த முருகனை ஒத்த வீரத்தையும் வேலேந்திய கையினையும் புறமுதுகிட்டு ஓடாத தன்மையையும் கொண்டவர்கள்.

பண்டமாற்று

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
..........................................................
................ உமணர் காதல் மடமகள்
நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின் .......
                                          ----அம்மூவனார், அகநா. 140 : 1-3,5-7
                     பரதவ மக்கள் ,  உப்பங்கழியில்- உழாமல் விளையும் உப்பு – வணிகர் – உப்பினைப் பெறுவர்- வணிகர் இளையமகள் – வெண்ணிறக் கல் உப்பு நெல்லுக்கு ஒத்த அளவினதே எனச் சேரியின்கண் பண்ட மாற்றாக விலை கூறுவாள்.

பண்டங்கள் பகர்நர்

அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி
குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பல்மாண் நல் இல்
பல்வேறு பண்டமோடு ஊண்மலிந்து கவனி
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
                              --மாங்குடி மருதனார், மதுரைக். 6 :   500 – 506
                      
                        இல்லற நெறியில் பிறழாது இல்வாழ்க்கை நடத்துபவர். அவர்கள், அண்மையில் அமைந்துள்ள பல திரட்சியுடைய மலையைக் காண்பது போல்பருந்து இளைப்பாறி இருந்து பின் உயரப்பறக்கும் பல தொழிலால் மாட்சிமைப்பட்ட நல்ல இல்லில்பலவாய வேறுபட்ட பண்டங்களையும் பல உணவுகளையும்நிலத்திடத்தும் நீரிடத்தும் பிறவிடத்தும் கிடைக்கும் பொருள்களையும்பலவாய வேறுபட்ட அழகிய  மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வர்.-------தொடரும்……

1 கருத்து: