வியாழன், 24 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –120 : 41. பண்டைய துறைமுகங்கள்

தொல்தமிழர் அறிவியல் –120 : 41. பண்டைய துறைமுகங்கள்

இறக்குமதி

இன் இசைப் புணரி இரங்கும் பெளவத்து
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்
கமழும் தாழைக் கானல் அம் பெருந்துறை
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந.
--காக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.55 : 3 - 6
                   இனிய ஓசை உடைய  அலைகள் ஒலிக்கும் கடல் வாயிலாக வந்த நல்ல ஆபரணங்களாகிய செல்வம் தங்கும் பண்டகசாலைகளை உடையதும் மணம் வீசுகின்ற தாழை மரங்கள் பொருந்திய கடற்கரைச் சோலைகள்  - அழகிய பெரிய துறைகள் உடையதுமாகிய குளிர்ந்த கடல் பக்கத்தே விளங்கும் நல்ல நாட்டிற்கு உரிய ஒப்பற்றவனே( ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்.)
                                        
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர் கொள்வார் ….
--கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 : 38 - 39
தம்மால் விரும்பப்பட்ட துறைமுகப் பட்டினத்தை அடைந்து வணிகம் செய்து  அங்கிருந்து மீண்டும் கரையைச் சேர்ந்ததாம் இன்பம் அடைதற்குக் காரணமான மரக்கலத்தின் வருகையினை விரும்பி எதிர்கொண்டு வரவேற்று மகிழும் வணிகர்.

சுங்க வரி

மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெருங் காப்பின்
வலியுடைய வல் அணங்கின் நோன்
புலி பொறித்து புறம் போக்கி   
                          ---கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 128 -  135
                  மேகங்கள் மழைக் காலத்தில் இடையறாது செய்யும் தொழிலைப் போல, அளந்து  கூற இயலாத அளவற்ற பொருள்கள், அத்தெருவில் அமைந்துள்ள அரிய காவலையுடைய பண்ட சாலையில் வந்து குவிந்திருந்தன, அப்பொருள்கள், கடலில் செல்லும் மரக்கலங்களில் ஏற்றப்படுவதற்காகக் குவிக்கப்பட்டிருந்தன.
வலிதாய் வருத்தும் தன்மை கொண்ட புலியின் இலச்சினையைப் பொறித்துப் பண்ட சாலையின் வெளியே அனுப்பப்படும் பொருள்களுக்கும் சுங்கம் விதிக்கப்பட்டது.

கடற் கொள்ளையர்

மிளகு எறி உகக்கையின் இருத்தலை இடித்து
வைகு ஆர்பு எழுந்த மை படு பரப்பின்
………………………………………
கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்
படும் திரைப் பனிக்கடல் உழந்த தாளே
---பரணர். பதிற். 41 : 21 - 27
                          பெரிய போரின்கண் அரசர்கள் இறக்கும்படி வெல்ல வேண்டியும் வெம்மையின் மிகுதி பெருகவும் பகைவரது கரிய தலைய உலக்கையால் இடித்த மிளகைப் போல இடித்து இடையறாமல் எழுந்த ஆரவாரம் பெருகவெள்ளிய தலை ஆட்டத்துடன் விரைந்து செல்லும் குதிரையை ஊர்ந்து..
           ஒலிக்கின்ற அலைகளை உடைய கடலிலே வருந்திய கால்கள் – (செங்குட்டுவன் கடல் நடுவே உள்ள தீவு ஒன்றில் வாழ்ந்த கொள்ளைக் கூட்டத்தினரை ஆங்குச் சென்று அழித்தான் என்பது வரலாறு.)

கடற் போர்

 விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல்
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு
முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே.
----பரணர். பதிற். 45 : 20  - 23
                        குறுக்காக வீசும் காற்று செலுத்தலால்  அலை முழங்கும்மிகுந்த நீரை உடையதாகக் கடல் விளங்குகிறது. அத்தகைய கடலில் விளங்குகின்ற மணியைப் போன்ற ஒளி வீசுதலையுடைய வேல் படைகளை ஏவி  - எதிர்த்த பகைவர்களைத் தடுத்தளித்த மன்னர் இனி யார் உள்ளார்? நினக்கு முன்னும் எனில் ஒருவரும் இல்லை என்பதாம். (  கடலகத்துத் தீவு ஒன்றில் இருந்து கொண்டு அவ்வழியே செல்லும் மரக் கலங்களைக் கொள்ளையடித்து வந்த கூட்டத்தினரைச் செங்குட்டுவன் தன் படைகளைச் செலுத்தி அவர்களை அழித்தான் என்பது வரலாறு. (மேலும் காண்க : அகநா. 212.)

ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர்
கொள்ளப் பாடற்கு எளிதினின் ஈயும்
                    ---பரணர். பதிற். 48 : 5 – 6
                               கடலின்கண் வாழும் பகைவரிடமிருந்து அரிதாகப் பெற்று வந்த பொருள்களையெல்லாம் அவற்றின் அருமை பாராது பாடுநர்க்கு எளிதில் ஈய வல்லான்.
                 நல் நுதல் விறலியர்ஈண்டு  அழகிய நெற்றியை உடைய பாண் மகளிரை; மகளிர்க்கு நெற்றி சிறுத்திருத்தல் அழகின் இலக்கணமாதலின் நல் நுதல் என்றார் . ( காண்க : ” நுதல் அடி நுசுப்பு மூவழிச் சிறுகிகலித். 108.) ----------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக