புதன், 23 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –119 : 41. பண்டைய துறைமுகங்கள்

தொல்தமிழர் அறிவியல் –119 : 41. பண்டைய துறைமுகங்கள்

நீர்ப்பெயற்று - கடல் வாணிகம்

நீர்ப்பெயற்று என்பதுநீர்ப்பாயல் துறைஎன்பதன் மரூஉமாமல்லபுரம் துறைமுகப்பட்டினம்.
…. … ……     …..               ……பாற்கேழ்
வால்வுளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
 மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின்
பரதர் மலிந்த பல்வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேணுயர் வரைப்பின்
---கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்.பா.: 321 – 326.
                            பால் போன்ற நிறத்தினையும், வெள்ளிய தலையாட்டத்தையும் உடைய குதிரைகளோடு வடநாட்டின்கண் உள்ள நுகர் பொருள்களையும் கொணர்ந்து தருகின்ற மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கும் பெருமையையுடைய கடற்கரை . மாடங்கள்; உயர்ந்து நிற்கின்ற மணல்மிக்க தெருக்கள்; பரதர் வாழும் பற்பல தெருக்கள் ; தொழில் செய்வோரால் காக்கப்படும் மிக உயர்ந்த பண்டகசாலைகளைக் கொண்டது  மாமல்லபுரம்.

கப்பல்-பன்னாடு

வேறு பன்னாட்டிற் கால் தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
---நக்கீரனார், நற். 31: 8,9
                வேறாகிய பல நாட்டினின்றும் கலங்களைக் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலவை ஒத்த மணற்பரப்பில்...

பன்னாட்டு வாணிகம்

வேறு பல் நாட்டுக் கால்தர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறை
---ஒளவையார். நற். 295 : 5 – 6
                      பல்வேறு நாடுகளிலிருந்தும் காற்றுச் செலுத்தலால் வந்து சேர்ந்த பல்வகைத் தொழில்களையும் மேற்கொள்ளுதற்கு இயைந்த கலங்கள் விளங்கித் தோன்றும் பெரிய துறைமுகம்.

கடல் வாணிகம்சாலி நெல்

வான் இயைந்த இருமுந்நீர்ப்
பேஎம் நிலைஇய இரும் பெளவத்து
கொடும் புணரி விலங்கு போழ
 கடுங்காலொடு கரை சேர
நெடுங்கொடி மிசை இதை எடுத்து
இன்னிசைய முரசம் முழங்க
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
 துறை முற்றிய துவங்கு இருக்கை
தெண் கடல் குண்டு அகழி
 சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ  
               -----மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  75 -88 

                    மேகங்கள் நீரைப் பருக்குவதற்காகப் படிந்த, பெரிய மூன்று நீர்மையை உடைய. அச்சம் நிலைபெற்று விளங்கும் கரிய கடலில், கடிய காற்றினால் வளைத்து வீசும் அலைகளைக் குறுக்கே பிளந்து செல்லுமாறு நாவாய்களின் பாய்கள் விரிக்கப்படும்.

                        அந்த நாவாய்களில் இனிய ஓசையை உடைய முரசும் முழங்கும், பொன் மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருள்களை நாட்டில் உள்ளவர்கள் நுகருமாறு வாணிகம் நன்கு நிலைபெற, அந்நாவாய்கள் கரையை அடையும், நெடிய கொடிகள் பாய்மரத்தின் மேல் ஆடும். கரு மேகங்கள் சூழ்ந்த மலை போல அம் மரக்கலங்கள் கடற்பரப்பில் அசையும்.
இத்தகைய தெளிந்த கடலாகிய ஆழத்தினையுடைய கிடங்கினையும், தலைமை சான்ற உயர்ந்த சாலி என்ற நெல்லின் பெயரைப் பெற்ற சாலியூரைக் கைப்பற்றிக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே.

முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்
அரம் போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்பு
 பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல்
 விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்று ஆங்கு
ஐம்பால் திணையும் கவினி அமைவர
----மாங்குடி மருதனார், மதுரைக்.6: 315 – 326

                          ஒலிக்கும் கடல் தந்த ஒளியுடைய முத்து . அரத்தால் கீறி அறுத்துச் செய்யப்பட்ட நேரிய வளைவணிகர்கள் கொண்டுவரும் பண்டங்கள்வெள்ளிய உப்புகரும்புக்கட்டியோடு சேர்த்துப் பொரித்த புளிகடற்கரை மணற் பரப்புகளில்வலிய கையையுடைய திமிலர், கொழுவிய மீன்களை அறுத்த, துடியின் கண்போல் அமைந்துள்ள உருண்டைத் துண்டுகள் ; ஆகிய இவற்றை ஏற்றிய சீரிய மரக்கலங்களைப் பெரு நீராகிய கடலில் செலுத்தும் மீகாமர் ; அகன்ற இடத்தையுடைய யவனம் முதலிய நாடுகளிலிருந்து வந்தவர் , இவ்விடத்தில் உண்டாய பேரணிகலன்களைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்ல பலரும்  ஒருங்கு கூடுவர்தங்களுடன் கொண்டு வந்த குதிரைகளோடு இப்பொருள்களும் நாள்தோறும் முறை முறையே மிகுவதால்  பல செல்வமும் நெருங்கி விளங்கும் இடம் நெய்தல் நிலம்பாண்டி மண்டலத்தின்கண் இவ்வாறு மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் என்ற ஐந்து கூறுகளை உடைய நிலங்களும் அழகு பெற்று விளங்கும்.
 பாண்டிய நாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்றது, ஆதலின் பாண்டியனுக்குபஞ்சவன்எனப் பெயர் உண்டாயிற்று.---தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக