செவ்வாய், 22 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –118 : 41. பண்டைய துறைமுகங்கள்

தொல்தமிழர் அறிவியல் –118 : 41. பண்டைய துறைமுகங்கள்

41. பண்டைய துறைமுகங்கள்

காவிரிப் பூம்பட்டினம்

மகரநெற்றி வான்தோய் புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே .................
-                                       --பரணர், அகநா. 181:20 – 22
                     மகரக் கொடியை உச்சியிற் கொண்ட வானத்தைத் தீண்டும் மதிலையும் உச்சியைக் காணமுடியாதவாறு ஓங்கி உயர்ந்துள்ள மாடங்களையும் உடைய காவிரிப்பூம்பட்டினத்தை உடையது சோழநாடாகும்.

பாண்டியர் துறைமுகம்

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவியந் தன்றிவ் வழுங்கல் ஊரே
                           ---மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், அகநா. 70: 13-17
                       வெற்றி வேலினையுடைய பாண்டியரது மிக்க பழைமையுடைய திருவணைக் கரையின் (தனுஷ்கோடி) அருகில், முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரில் வல்ல இராமன் அரிய மறையினை ஆராய்தற் பொருட்டு.....

கொற்கைத் தலைவன்
சீருடைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்
இலங்குவளை இருஞ்சேரி
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப் பொருந.
  --மாங்குடி மருதனார், மதுரைக். 6:  134 - 138

             பெரிய நன்மக்களிடத்து மேம்பட்டுத் தோன்றுவதால் புகழையுடைய  சிறந்த தலைமைப் பண்பினை உடையாய்-
சூல்முற்றி, ஒளி முதிர்ந்து விளங்கும் சிறந்த முத்துக்களையும்விளங்கும் சங்கினையும்  மூழ்கி எடுப்பவர் உறையும் சேரிகளையும் கள்ளாகிய உணவை உண்ணும் இழிந்த   குடிகள் தங்கியுள்ள சிற்றூர்களையும் கொண்ட கொற்கை என்னும் நல்ல ஊரில் உள்ளார் விரும்புதலையுடைய பொருநனே.

                     கொற்கை முத்து,சங்கு ஆகியவற்றைக் குளிப்பார் இருக்கைகளையும், கள் உண்பார் இருக்கைகளையும் புறஞ்சேரிகளாய்க் கொண்ட ஊராகும். நெடுஞ்செழியன் , கொற்கை என்னும் துறைமுகப் பட்டினத்திற்கு உரிமை பூண்டவன் என்பது இதனால் உணரப்படும்.

பாண்டியர் – முத்து

இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்
                வெண்கண்ணனார், அகநா.130:9,10

குளிர்ந்த ஒளியினையுடைய முத்துக்களைப் பரந்து வரும் கடல் அலைகள் கொணர்ந்து வந்து தரும்; அம்முத்துக்கள் குதிரைகளின் கால்களை வடுப்படுத்தும்.--------தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக