புதன், 30 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –126 : 43. ஆழிப் பேரலை - சுனாமி

தொல்தமிழர் அறிவியல் –126 : 43. ஆழிப் பேரலை - சுனாமி

43. ஆழிப் பேரலை - சுனாமி

துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
--அரிசில் கிழார் . பதிற். 72  : 8  - 11
                        எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக் காலத்தின் இறுதி புகுகின்ற போதுநிலவுலகின் பாரம் நீங்கநீரானது எங்கும் பரவும்படி வந்து நெருங்கும்அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும்இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து எழுகின்ற வெள்ளம்எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து பரவும்.
( ஊழியின் இறுதியில் உலகமெலாம் இருள் பரவுமெனவும் கடல் பொங்கி எழுந்து நீரால் உலகத்தையே மூடுமெனவும் பின்னர் பன்னிரு சூரியர்களும் வடவைத் தீயும் கிளர்ந்தெழுந்து இருளைப் போக்கி நீரையெல்லாம் வற்றச் செய்யுமெனவும்  நூல்கள் கூறும்.ஊழி பற்றிய குறிப்புகள்- பரிபா.6; பதிற். 28. )

கடல் கொண்ட தென்னாடு

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின்
 பொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட
 புலியொடு வில் நீக்கி புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட …………………….
 --சோழன் நல்லுருத்திரன். கலித்.104 :  1 – 5

                    ஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் (இலெமூரியா) மண்ணைக் கைக் கொண்டதால்  - அப்பகுதி மூழ்கிற்றுமனம் தளரா பாண்டிய மன்னன்  - தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டுபகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி அவர் மேல் படை எடுத்தான்சோழர் சேரர் தம் படைகளை வென்று  - அவர்தம் புலி .வில் கொடிகளை நீக்கித் தன் மீனக் கொடியைக் கைப்பற்றிய பகுதிகளில் நாட்டிஆற்றலால் மேம்பட்டு நின்றனன் கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன் .

கடல் புடைபெயர்ச்சி

………… ……….. கூடல்
மன்றல் கலந்த மணிமுரசின் ஆர்ப்பெழக்
காலோடு மயங்கிய கலிழ்கடலென
மால்கடல் குடிக்கு மழைக்குரலென
--நல்லந்துவனார். பரிபா.8: 29 - 32
                     மதுரையின்கண் மணம் பொருந்திய மணிநிறமுடைய முரசத்தின் முழக்கம் எழுந்ததாகஅந்த மணமுரசம் காற்றால் ஏறுண்ட புடைபெயர்ச்சியுடைய கடல் போலவும்காற்றானே மயங்கும் அக் கடல் நீரைப் பருகிநின்ற முகிலினது முழக்கம் போலவும்…..
                         இடிமுழக்கத்தோடு பெருங்காற்றோடு ஆழிப்பேரலை எழும்போது கடல் உள் வாங்குதலைக் கடல் புடைபெயர்ச்சி என்றார். கடல் புடைபெயரும் பொழுது நிலத்திடம் நீராதலும் நீரிடம் நிலமாதலும் இயற்கை நிகழ்வாம்.

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி.”
                                                     —இளங்கோவடிகள். சிலப். 11: 19-22
                        பஃறுளி ஆற்றுடனே பலவாகிய பக்க மலைகளை உடைய, குமரி மலையையும் கடல் கொண்டதனால் வடதிசைக் கண்ணதாகிய கங்கை ஆற்றினையும் இமயமலையினையும் கைக்கொண்டு ஆண்டு, மீண்டும் தென் திசையை ஆண்ட தென்னவன் வாழ்வானாக.

அறிவியல் நோக்கு

                     சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் நாடு தான்2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம்.2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது. ---விக்கிபீடியா.-------தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக