ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –112 : 38. மழை - அறிவியல்

தொல்தமிழர் அறிவியல் –112 :  38. மழை  - அறிவியல்


பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர்பருகிக்
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றிக்
காலை வந்தன்றால் காரே ….
                           --கருவூர்க் கலிங்கத்தார், அகநா.183: 6-10
                              பெருங் கூட்டமான  மேகங்கள் திரண்டு சுருண்டு வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய துறைகளையும் உடைய பெருங்கடலினுட் சென்றன, சென்று  நீரினை மிகுதியாக  உண்டன. உண்டு, மேற்குத் திசையில் எழுந்து சூலுற்ற பெண் யானைக் கூட்டம் போல இடந்தோறும் இடந்தோறும் வந்து தோன்றி ஒலியுடன் மழையைப் பொழிவதற்கு ஒன்றுகூடக் கார்காலம் காலையே வந்து விட்டது.

……………………. இன்னீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர் என
…………………. நற்.115 : 3 – 4
 மேகங்களும் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டுஎஞ்சிய கடலின் நீர் சிறிது நீர் என்னும்படி கொணர்ந்தன.

இரு விசும்பு அதிர மின்னிக்
கருவி மாமழை கடல் முகந்தனவே
-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். நற். 329 : 10 – 11
  
                            கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.
மேற்சுட்டிய மேற்கோள்களில் மழை எவ்வாறு பொழிகிறது என்பதற்கான அறிவியல் நுட்பம் செறிந்த உண்மைகளை இன்றைய அறிவியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டு உணரவும்பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் தெற்றென விளங்கக் காணலாம்.

வலமாகச் சூழ்ந்து எழுதல்  என்றால் என்ன …?

குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு
                                     --கபிலர் அகநா. 278: 1 – 3
மேகங்கள் கீழ்த்திசைக் கடலிடத்து நீரை முகந்து  கொண்டன ; முரசினையுடைய மன்னர்களின் பல்வகைப் படைக்கலன்களை உடைய  சேனையின்கண்ணே யானைகளின் அணிவகுப்புப் போன்று தோன்றி வலமாக எழுந்து சென்றன.

வலமாக எழ- மழை பொழிதல்

மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை
                                     --மதுரை எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே. மழை –

பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி
மல்குகடல் தோன்றியாங்கு .....................
               --மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநா. 298: 1 – 3

                                  உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பலகதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகை தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து, நீர்முக்க கடலிலே தோன்றினாற்போல.  ‘ வழையமல் அடுக்கத்து வலனேர்பு ’..அகநா. 328 : 1
------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக