திங்கள், 29 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -102


தன்னேரிலாத தமிழ் -102

சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு”.—நாலடியார்.

வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் தேடிச்சென்று அவர்தம் நட்பைக்கொள்ளவேண்டும்.

சனி, 27 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -101


தன்னேரிலாத தமிழ் -101

பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமிதான் அதிரும்
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண்மூவர்
பேசில் அலை சுவறும் பேதையே பெண்பலர் தாம்
பேசில் உலகம் என்னாமோ பின்.”நீதிவெண்பா.

பெண்ணொருத்தி பேசினால் பூமி அதிரும் ; பெண்டிர் இருவர் பேசினால் விண்மீகள் கீழே உதிரும் ;  பெண்டிர் மூவர் பேசினால் கடலே வற்றிப்போகும் ; பெண்டிர் பலர் பேசினால்  உலகம் என்னாகுமோ..?

புதன், 24 ஜூன், 2020


தன்னேரிலாத தமிழ் -100

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின்
பொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட ……………………….”கலித்தொகை.

முன்னொரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் மண்ணைக் கைக்கொண்டதால் அப்பகுதி மூழ்கிற்று. மனம் தளராத பாண்டிய மன்னன், தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டுப் பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி, அவர் மேல் படையெடுத்தான். சோழர், சேரர் படைகளை வென்று, அவர்தம் புலி, வில் கொடிகளை நீக்கித் தன் மீன் கொடியைத் தான் கைப்பற்றிய பகுதிகளில் நாட்டித்  தன் ஆற்றலால் மேம்பட்டு நின்றனன், கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன்.


செவ்வாய், 23 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -99


தன்னேரிலாத தமிழ் -99

யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்ட த்து உயர்ந்திசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு ….”புறநானூறு.

யானையை வேட்டையாடச் சென்றவன் எளிதாக அதனைப் பெறவும் கூடும் ; குறும்பூழ்ப் பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு ;  அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் நல்வினை ஆற்றியோர் உயர்ந்த உலகில் இன்பம் அடைதல் கூடும்.


திங்கள், 22 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -98


தன்னேரிலாத தமிழ் -98

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.” பதிற்றுப்பத்து.

ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் செருக்கித் திரிவோரைப் போரிட்டு அழித்து வென்றவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

ஞாயிறு, 21 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -97


தன்னேரிலாத தமிழ் -97

செல்வத்தைப் பெற்றார் சினம் கடிந்து செவ்வியராய்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்ல ஆம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பது ஓர் வைப்பு.”--- அறநெறிச்சாரம்.

பொருள் கிடைக்கப் பெற்றவர்கள், சினம் தவிர்த்து, காட்சிக்கு எளியராய், தம்முடைய உறவினர்கள் வறுமையால் துன்புறா வண்ணம், அவர்களோடு பகுத்துண்டு, நற்பயன்கள் தருகின்ற அறத்தினை ஒருபோதும் மறவாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பின்பு தங்களுக்குப் பயன்படும்படி விண்ணுலகில் சேமித்து வைக்கின்ற சேமிப்பு (புகழ்) என்று சான்றோர் கூறுவர்.