சனி, 30 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –442.

 தன்னேரிலாத தமிழ் –442.

ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவியிருந்த தமிழர்கள்  உலகிற்கு வழங்கிய கொடை….!  

The Indians  introduced ZERO into mathematics. This enabled them to elaborate a simple and convenient   way of counting by means of ten number symbols. Today, almost the whole world uses the system. Europeans call the numbers Arabic because they learned them from the Arabs, but the Arabs called them Idian. –F.Korovkin, History of  the Ancient World, P.84.

தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுழியைக் குறித்துள்ளனர், பரிபாடல் சுழியைப் பாழ்என்று குறித்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுன்னம் என்னும் குறியானது அரேபியர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதெனினும் அரேபிய எண் முறையில் 0=5 என்றிருந்தது. சுழியைக்குறிக்க அவர்கள் ஒரு புள்ளியை மட்டுமே (Zero is simply a dot) பயன்படுத்தினர். 0 இக்குறியீடும் இந்தியாவிலிருந்து அரேபியா வழியாக ஐரோப்பா சென்றடைந்தது.

தமிழ் எழுத்துகள் பலவும் சுழி உடையனவாக இருக்கின்றன. காலப்போக்கில் நிகழும் எழுத்து வரிவடிவ வளர்ச்சி( மாற்றம்) தமிழிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் தொடங்கி இன்றைய வடிவம் நோக்கி வளர்ச்சி அடைந்ததுதமிழில் பத்து என்பதைக் குறிக்கும் தொன்மைக் குறியீடுஒன்றும் சுழியும் (-10) இணைந்ததைப்போல இருந்தது.

எண்களின் எண்ணிக்கை வளரத் தொடங்கியது. ஒன்றுமில்லை என்பதைக் குறிக்க ஒரு குறி (0) கண்டுபிடித்தனர். இக்குறியீடு பதின்ம ஈரிலக்க (Decimal system)  முறைக்கு வழி வகுத்தது. கணிதவியலுக்கு  இந்தியர்களின் (தமிழர்) அரிய கொடையாகும்…!

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –441: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –441: குறள் கூறும்பொருள்பெறுக


496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.


வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர் கடலில் ஓடாது ; கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது. இடனறிந்து இயங்குக.


 எந்த ஒன்றின் இருப்பும் இயக்கமும் அதனதன் இடத்திலேதான் பெருமைபெறும் ; இஃது இயற்கையின் நியதி. இடம் மாறினால் தடம் மாறும்.


வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதுநெட்டிருப்புப்

பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசு மரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.”நல்வழி, 33.


யானையின் உடலை ஊடுருவிப் பாய்ந்த  கூர்மையான அம்பு, பஞ்சில் பாய்ந்து ஊடுருவாது ; இரும்பால் செய்த கடப்பாரைக்கு உடையாத  கடிய கருங்கல் பாறையைப் பசுமையான மரத்தின் வளர்கின்ற வேர் உடைக்கும். அதுபோல எக்காலத்திலும் கடுமையான சொற்கள் இனிமை உடைய சொற்களை வெற்றி கொள்ள இயலாது.

 

புதன், 27 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –440: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –440: குறள் கூறும்பொருள்பெறுக.


495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.


முதலை, தனக்கு உரிய இடமாகிய  ஆழமான நீரில் இருந்தால்,   தன்னைவிட வலிமையான விலங்கையும் வேட்டையாடி வெல்லும். அதுவே, தன்னிடத்தை விட்டுத் தரைக்கு வருமானால், அதைவிட வலிமை குறைந்த பிற உயிரினங்கள் அதனை எளிதாக வென்றுவிடும்.


தறுகண் யானை தான் பெரிது ஆயினும்

சிறுகண் மூங்கில் கோலுக்கு அஞ்சுமே.”வெற்றிவேற்கை, 60.


அச்சம் இல்லாத யானை, உருவத்தால் பெரிதாயினும் பாகன் கையிலுள்ள கணுக்கள் உடைய மூங்கில் கோலுக்கு அஞ்சி நடக்கும். அதுபோல வலிமையும் பெருமையும் உடையவர்கள், தம்மை ஆள்வோர்க்குப் பணிந்து நடப்பார்கள்.

சனி, 23 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –439: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –439: குறள் கூறும்பொருள்பெறுக


490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.


அசைவற்று உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போலக் காலம் கனியும்வரை காத்திருந்து, உறு மீனைக் கொத்தி எடுக்கும் கொக்கினைப் போலத் தக்க நேரத்தில் பகையை அழிக்க வேண்டும்.


அடக்கம் உடையார் அறிவு இலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டாமடைத்தலையில்

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.” –வாக்குண்டாம், 16.


கொக்கு, நீரோடும் மடை அருகில் நின்று, நீரோடு செல்லும் சிறிய மீன்களை விட்டுவிட்டுப் பெரிய மீன் வரும்வரை காத்திருக்கும்.  அதுபோல, அடக்கம் உடையவர்களை அறிவு இல்லாதவர்கள் என்று  எண்ணி, அவர்களை வெல்ல நினைக்கக் கூடாது.

வியாழன், 21 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –438: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –438: குறள் கூறும்பொருள்பெறுக


481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


இரவில் வேட்டையாடும் வலிமையுள்ள கோட்டானைப் பகல் பொழுதில் காக்கை வென்றுவிடும். அதுபோல, பகையை வெல்லக் கருதும் வேந்தன் காலம் அறிந்து களத்தில் இறங்க வேண்டும்.


காலம்அறிந்து ஆங்குஇடம் அறிந்துசெய் வினையின்

மூலம்அறிந்து விளைவுஅறிந்து மேலும் தாம்

சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து

ஆள்வினை ஆளப் படும். ” –நீதிநெறிவிளக்கம், 52.


ஒரு செயலைச் செய்வதற்கான காலம், இடம், காரணம் ஆகியவற்றையும் அச்செயலைச் செய்வதினால் ஏற்படும் பயனையும் அறிந்து, மேலும் தாம் ஆராய வேண்டியவற்றைச் செம்மையாக ஆராய்ந்து, தம் முயற்சிக்குத் துணை ஆவார் வலிமையையும் அறிந்து, அதன் பின்னரே செயலில் இறங்க வேண்டும். எனவே, காலம் , இடம், கருவி முதலியவற்றைக் கருத்தில் கொண்டே  ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்.