திங்கள், 10 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.28.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.28.

 

களப்பாள் ஒன்றா இரண்டா..? ஏழு களப்பாள்கள், கூற்றங்களாகக் கொண்டு ஆண்ட  கூற்றுவன் (நாயனார்), மூவேந்தரை வென்றவன் இவ்வூரினன் என்பர்.

 ஏழு களப்பாளைச் சுற்றி வடக்கே அக்கரைக் கோட்டம், பன்னியூர்,கரம்பக்குடி, பனையூர், கோட்டூர்; மேற்கே வங்கத்தான்குடி, வேதபுரம், மானங்காத்தான் கோட்டம், பெருக வாழ்ந்தான்; தெற்கே குலமாணிக்கம், எடையூர், முத்துப்பேட்டை; கிழக்கே மீனவநல்லூர், எழிலூர், ஆட்டூர், மடப்புரம், திருத்துறைப்பூண்டி. (ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்குரியன).

 

                       பாமணி ஆற்றின் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பழம்பெரும் பூமி, வெண்ணாற்றின் கிளை ஆறுகளால் வளங்கொழிக்கும்  நெல் வயல்களைக் கொண்டது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் எனப் பச்சைப் பட்டு போர்த்திருக்கும். வயலில் நீர் பாய்ச்ச,  காலால் மடையை மிதித்தால் காவிரி வெள்ளம் பாயும்.

காலச் சுழலில் களப்பாள்

நெல்லைத்தவிர வேறு விளைபொருள் இல்லை ; விவசாயம் தவிர வேறு தொழிலும் இல்லை. ஆடி முதல் தைவரை சேற்றோடுதான் போராட்டம். மாசியும் பங்குனியும் மத்தளக் கொட்டு; சித்திரை பொறந்தோன குப்புறக் கொட்டு என்பதே நிலத்தின் பழமொழி. சேற்றோடு போராடியவன் சோற்றோடு போராடும காலம். இயலாமை எங்குமே இல்லை; இல்லாமை எங்கும் இருந்தது. இந்நிலை ஏன்…..எப்படி வந்தது….?

 விளைநிலங்கள் அனைத்தும் பண்ணைகளுக்கே சொந்தம்; பண்ணை ஆட்களும் அடிமைகளாகப் பண்ணைக்குச் சொந்தம். ஆண்டான் அடிமைச் சமுதாயம் மலையும் மடுவுமாக தோற்றம் பெற்றது. பண்ணை முதலாளிகள் முதலியார்,ஐயர், மடாதிபதிகள். பண்ணை வீடுகள் சார்ந்த தொழிலாளிகள் பரிகாரி, பூசாரி, குருக்கள்,குடியானவர்கள். குடியானவர்கள் பண்ணை முதலாளியை ஐயா என்றும் அவர்தம் மனைவியை அண்ணி என்றும்  அவர்தம் குழந்தைகளைத் தம்பி என்றும் அழைப்பர். தாழ்த்தப்பட்டவர்கள், குடியானவரை ஐயா என்றும் அவர்தம் மனைவியை ஆச்சி என்றும் அவர்தம் குழந்தைகளை  ஐயா என்றும் அழைப்பர். பண்ணையார்க்குக் குடியானவர்கள் தீண்டத்தக்கதவர்கள்;  பண்ணையார்க்கும் குடியானவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் . இத்தகைய பண்ணை ஆட்சிமுறையில் முதல் நிலை-பண்ணையார்கள்; இடைநிலை குடியானவர்கள் ; கடைநிலை தாழ்தப்பட்டவர்கள் இவ்வகையான ஏற்றத்தாழ்வுகள் ஊரில் ஓர் இறுக்கமான சூழ்நிலையைத் தோற்றுவித்தன.

…………………………….தொடரும்……………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக