வியாழன், 31 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 21

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 21
சாவகர்
வண்டுபடப் பழுநிய தேன் ஆர் தோர்றத்துப்
 பூவும் புகையும் சாவகர் பழிச்ச
சென்ற காலமும் வரூஉம் அமையமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
 வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் ….
                   மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 475 - 481
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த, தேன் இருந்த தோற்றத்தையுடைய பூக்களையும், புகையினையும் ஏந்தி விரதம் கொண்ட சாவகர் அருக தேவரைத் துதிப்பர்.
சென்றகாலத்தையும், வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடு மிக உணர்ந்து அவற்றை உலகத்தார்க்கு உரைப்பர்.
 தேவர் உலகத்தையும், அதன் செய்திகளையும், எல்லா நிலங்களின் செய்திகளையும் தம் நெஞ்சால் அறிதற்குக் காரணமாகிய அறிவுடையவர்.
தமக்கு அமைந்த விரதங்களையும், அவ்விரதங்களால் இளையாத உடம்பினையும் உடையவர். கல்விகளால் நிறைந்து, களிப்பின்றி அடங்கிய அறிவினையுடையவர்,
( சாவகர் – உலக நோன்பிகள்  ; சமண சமயத்தில் விரதம் காக்கும் இல்லறத்தார் ; சேக்கை – பள்ளி .) 

புதன், 30 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 20

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 20
ஐவகை ஒழுக்கம் –பஞ்சசீலம்
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு
தாமுன் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவளர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும்   
                                        மாங்குடி மருதனார், மதுரைக். 6:  463 – 467
திண்ணிய ஒளியையுடைய பேரணிகலன்களை அணிந்து, விருப்பம் பொருந்திய அழகினோடு, பேரிளம் பெண்டிர்,   கணவரோடு கூடித் தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போலத் தம் ஒள்ளிய சிறு பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, தாமும் தம் கணவரும் தம் பிள்ளைகளும் ஒருசேர சீலத்தால் சிறந்து விளங்கும்படி, பூசைக்கு வேண்டும் பூவினையும் தூபங்களையும் ஏந்தி வணங்கி, மிகுதியாகத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் பெளத்தப் பள்ளியும்…
( மதாணி -  பேரணிகலன் ; குறு மாக்கள் – சிறு பிள்ளைகள் ;  ஓராங்கு – சீலத்தால் சிறந்து விளங்க ; சீலம் -  கொல்லாமை, கள் உண்ணாமை, பொய் கூறாமை, கள்ளாமை, பிறன்மனை நயவாமை என்பன - இவை பஞ்ச சீலம் எனப்படும். ) 

செவ்வாய், 29 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 19

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 19
நெடியோன் – சிவன்
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 453 – 455
திசைகளை உடைய ஆகாயத்துடன், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து பூதங்களையும் சேரப்படைத்த மழுப்படையாகிய வாளினையுடைய பெரியோன் – ஏனையோரின் முதல்வன் ஆவான்.
சிவபெருமான், நெடியோன் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளான்.
( மாகம் – திசை ; மழு – சிவன் கையில் உள்ள வாள் ; நெடியோன் ; சிவபெருமான்.) 

திங்கள், 28 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 18

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 18
தீர்த்த நீராடல்
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 427 - 429
தீவினையைக் கழுவுவதற்குக் காரணமான தீர்த்த நீரைத் தன்னிடத்தே கொண்ட – நெருங்கும் திருநாளை உடைய ஏழாம் நாள் அந்தியில், விழாவைக்காணத் திரண்டுவரும் நாட்டிலுள்ளார் ஆர்த்த ஆரவாரம் போலப் பெரிய நான்மாடத்தால் மலிந்த புகழொடு விளங்கும் நகரின் அகன்ற இடத்தையுடைய, நாட்காலத்துக் கடையில் ஆரவாரம் எழுந்தது.
 மதுரைக்கு ’நான் மாடக் கூடல்’ என்ற பெயரும் உண்டு.  திருஆலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு மாடங்கள் கூடலின் இப்பெயர் பெற்றது.
( தீர்த்த நீர் – பாவம் போக்க நீராடல் ; எழுநாள் அந்தி – கால்கோள் தொடங்கி ஏழாம் நாள் அந்தியில் நடைபெறும் தீர்த்தமாடல் ; கழு நீர் – கழுவும் நீர்.)

ஞாயிறு, 27 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 17

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 17
ஆதி போகிய ….
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதிபோகிய
 கொடிபடு கவல விடுமயிர்ப் புரவியும்
                         மாங்குடி மருதனார், மதுரைக். 6: 389 -391

கையில் எடுத்த மத்திகையை உடைய  வல்லவன் ஐந்து கதிகளிலும், பதினெட்டுச் சாரிகைகளிலும் அக்குதிரைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளமையால் – தங்கள் குளம்புகள் அழுத்திய வட்டமான இடத்திலும், ஆதி என்னும் கதியில் அவை ஓடின – ஒழுங்குபட்ட பிடரினையும் , இடுமயிரினையும் கொண்டவை.
( கோலன் – சவுக்கு உடையவன் ; கொள்கை – ஐந்து கதி , பதினெண்சாரிகை  ஆகிய இயல்பு ;  ஆதி – நெடுஞ் செலவு இயக்கம் ; கவல் – பிடரி ; இடுமயிர் – நிறம் ஊட்டப்பட்ட கவரி) 

சனி, 26 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 16

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 16
பலவகைக் கொடிகள்
சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி
வேறு பல்பெயர ஆரெயில் கொளக்கொள
நாள்தோறு எடுத்த நலம்பெறு புனைகொடி
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு
புலவுப் படக்கொன்று மிடைதோல் ஓட்டி
புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வெறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ
                         மாங்குடி மருதனார், மதுரைக். 6: 366 – 373
மதுரை நகரில் நாளங்காடி, அல்லங்காடி என்ற இருபெரும் கடைத் தெருக்களையும்  அவற்றில் கட்டப்பெற்றுள்ள பல்வேறு கொடிகளும் –
கோயில் விழக்களுக்கு கட்டப்பெறும் பல அழகிய கொடிகள் ; போரில் பெற்ற வெற்றியைக் குறிக்க நாள்தோறும் நாட்டப் பெறும் வெற்றிக் கொடிகள் ; கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடிகள் ; கல்வி, கொடை, தவம் ஆகியவற்றைக் குறிக்கும் கொடிகள் …
பலமொழி பேசும் மக்கள் கலந்தினிது உறையும் மதுரையில் இக்கொடிகள் நாட்டின் அறநெறி பிறழா வாழ்வினைக் குறிப்பனவாகும்.
( சாறு – விழா ; நிலவு வேல் – நிலைபெற்ற வேல் – களி – களிப்பு ; பதாகை – பெருங்கொடி. ) 

வெள்ளி, 25 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 15

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 15
கடல் வாணிகம்
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்
அரம் போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்பு
 பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல்
 விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்று ஆங்கு
ஐம்பால் திணையும் கவினி அமைவர
மாங்குடி மருதனார், மதுரைக்.6: 315 – 326

ஒலிக்கும் கடல் தந்த ஒளியுடைய முத்து . அரத்தால் கீறி அறுத்துச் செய்யப்பட்ட நேரிய வளை ;  வணிகர்கள் கொண்டுவரும் பண்டங்கள் ;  வெள்ளிய உப்பு ;  கரும்புக்கட்டியோடு சேர்த்துப் பொரித்த புளி ;  கடற்கரை மணற் பரப்புகளில் – வலிய கையையுடைய திமிலர், கொழுவிய மீன்களை அறுத்த, துடியின் கண்போல் அமைந்துள்ள உருண்டைத் துண்டுகள் ; ஆகிய இவற்றை ஏற்றிய சீரிய மரக்கலங்களைப் பெரு நீராகிய கடலில் செலுத்தும் மீகாமர் ; அகன்ற இடத்தையுடைய யவனம் முதலிய நாடுகளிலிருந்து வந்தவர் , இவ்விடத்தில் உண்டாய பேரணிகலன்களைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்ல பலரும்  ஒருங்கு கூடுவர்.  தங்களுடன் கொண்டு வந்த குதிரைகளோடு இப்பொருள்களும் நாள்தோறும் முறை முறையே மிகுவதால்  பல செல்வமும் நெருங்கி விளங்கும் இடம் நெய்தல் நிலம் .  பாண்டி மண்டலத்தின்கண் இவ்வாறு மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் என்ற ஐந்து கூறுகளை உடைய நிலங்களும் அழகு பெற்று விளங்கும்.
 பாண்டிய நாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்றது, ஆதலின் பாண்டியனுக்கு ‘பஞ்சவன்’ எனப் பெயர் உண்டாயிற்று.
( பரதர் – பண்ட வாணிகர் ; கூலம் – பல்பொருள் ; செறு – பாத்தி ; திமிலர் – படகில் சென்று மீன் பிடிப்பவர்; துணியல் – துண்டு ; பெருநீர் ஓச்சுநர் – கடலில் மரக்கலங்களை இயக்கும் மீகாமர்.) 

வியாழன், 24 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 14

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 14
குறிஞ்சி நில வளம்
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி
                                               மாங்குடி மருதனார், மதுரைக். 6: 286 – 290

மணம் கமழும்  அகிலையும் சந்தனத்தையும் வெட்டி, மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்ட குறிய கதிர்களையுடைய தோரை என்னும் நெல்லும், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும், ஐவன நெல் என்னும் வெண்ணெல்லுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும், மஞ்சளும், பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், மேலும் பல்வேறு பண்டங்களும் கல் தரையில் குவிக்கப்பட்டிருக்கும்.
( காழ் – வயிரம் பாய்ந்த அகில், சந்தனம் ; கோடு – மேட்டு நிலம் ; தோரை -  மூங்கில் நெல் ; ஐயவி – வெண்சிறுகடுகு ; ஐவனம் – வெண்ணெல்  ; தாரம் – பண்டம்  ; கறி – மிளகு .) 

புதன், 23 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 13

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 13
முல்லை நிலப் பொன்
எழுந்த  கடற்றில் நன்பொன் கொழிப்ப
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி
மடக்கண் பிணையொடு மறுகுவன உகள
மாங்குடி மருதனார், மதுரைக். 6:  274 - 276
பெரிய அழகினையும் சிறிய தலையயும் உடைய நெளவி மான் தான் வளர்ந்த காட்டில் மாற்றுக்குறையாத பொன் வெளிப்பட்டுத் தோன்றுமாறு மடப்பத்தை உடைய கண்களைக் கொண்ட பிணியுடன் துள்ளித் திரியவும்..
கடறு – காட்டுப் பகுதி ; பிணை – பெண் மான் ; உகள – துள்ளித் திரிய.)
 ஆய்வுக் குறிப்பு :- சங்கஇலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பொன் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து ஆய்க.     

செவ்வாய், 22 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12 - அ

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12 - அ
நிலையாமை
படுகண் முரசம் காலை இயம்ப
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் கனைஇரு முந்நீர்த்
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
    மாங்குடி மருதனார், மதுரைக். 6: 232  – 237


ஒலிக்கின்ற பள்ளி எழுச்சி முரசம், நாட்காலத்தே ஒலிக்கும் வண்ணம் இருந்து, பகைவர் படைக்குக் கேடு உண்டாகும்படி வென்று, பின்னும் அழிக்க வேண்டும் என்று, நிலங்களில் தங்கி, வெற்றி முரசு பொருந்திய பெரிய வலிமையையுடைய, பல வேல் படையையும் உடைய அரசர்கள், செறிதலையுடைய கரிய கடலின் கரையைப் பொருது ஒலிக்கும் திரை குவிக்கின்ற மணலினும் பலராவர்.
புகழ் எங்கும் பரவுமாறு, போர் நடத்தி மக்களுக்குரிய  மன உணர்வு இல்லாமையால் – பிறவியைப் போக்கிக் கொள்ளமுயலாமல் பயனின்றி ஆண்டு மாண்டோர் – கடல் அலை குவிக்கும் மணலினும் பலராவர்.
(முரசம் – பள்ளியெழுச்சி முரசம் ; உரை – புகழ்)

திங்கள், 21 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12
நிலையாமை உணர்த்தல்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்த விழுமியோர் வரினும்
பவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணவன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசை கேட்குவையே
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇய நின் சேண் விளங்கு நல் இசை
  மாங்குடி மருதனார், மதுரைக். 6: 197 – 209

ஒரு பொய் கூறுவதால், உயர்ந்த நிலையையுடைய தேவருலகத்தை, அவர்கள் நுகரும் அமுதத்தோடு பெறும் பேறு கிட்டுவதாயினும், அவற்றைத் தருகின்ற பொய், உன்னைக் கைவிட்டு நீங்கும்படி , நீ மெய்யுடன் நட்புச் செய்தலை உடையாய் –
 முழங்கும் கடலை எல்லையாக உடைய அகன்ற இடத்தைக் கொண்ட இவ்வுலகில் உள்ளவர்களுடன் கூடி, உயர்ந்த தேவர் உலகில் உள்ள தேவர்களும் பகைவராய் வரினும், பகைவர்க்கு அஞ்சித் தாழ்ந்து ஒழுகுதலைச் செய்ய மாட்டாய் –
தென் திசை நிலத்தில் உள்ள மலைகள் எல்லாம் நிறையும்படி, வாணன் என்ற சூரன் வைத்த சீரிய பொருள்திரளைப் பெறுவதாயினும் பிறர் கூறும் பழி நமக்கு வருவதாகுக என்று நீ கருதுவதில்லை –
சிறந்த பொருளைப் பிறர்க்குக் கொடுத்தலாகிய நெஞ்சுடன் புகழை விரும்புவாய் –
ஐம்பொறிகளாலும் நுகரப்படுவனவாகிய , இந்நுகர் பொருள்களுக்கு நின்னோடு என்ன உறவு உள்ளது..?
நின்னிடத்து உண்டாகிய மாயை இனிக் கெடுவதாகுக –
அம்மாயையைக் கொல்கின்ற போர்த்தொழிலில் வல்லவனே –
பெரியதாய் இருப்பதொரு பொருளை யான் உனக்குக் கூறுவல் , அஃது என்னால் காட்டுதற்கு அரிது, அதனைத் தொல்லாணை நல்லாசிரியர் அறிவுறுத்த கேட்பாயாக, வாழ்வாயாக, சேட்புலமெல்லாம் சென்று விளங்கும் உன்னுடைய சிறந்த புகழ், ஒரு காலமும் கெடாமல் நிலை பெறுவதாகுக.
மதுரைக்காஞ்சியின் கருப்பொருள் :- நிலையாமை உணர்ந்து பற்று அறுத்தலே வீட்டின்பத்திற்கு வழி என்பதைப் புலவர் அரசனுக்கு உணர்த்தல்.
 வாய் நட்பினையே – உண்மையுடன் நட்புச் செய்தல் ; ஏணி – எல்லை ; விண்டு – மலை ;  இசை – புகழ் ; முன்னிலை – ஐம்பொறிகளால் நுகரப்படுவனவாய் முன்னிற்கும் பொருள்கள்.)
ஆய்வுக் குறிப்பு : தென் திசை நிலத்தில் உள்ள மலைகள் எல்லாம் நிறையும்படி – என்றது, தென் திசையில் நின்ற குமரிமலை நிலப்பரப்பைக் குறித்தாரா.. ஆய்க. 

ஞாயிறு, 20 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 11

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 11
 நாவலந்தீவு
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டிலம் முற்றி
அரசியல் பிழையாது அறநெறி காட்டி
  மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 189 – 191
நின்னால் சிறிது சினம் கொள்ளப்பட்ட பகைவர், நின் ஏவல் கேட்டு நடந்தனர், அதனால் அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந் தீவின்கண் அமைந்துள்ள சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் நிலப் பரப்புக்களை உன்னுடையதாக வளைத்துக்கொண்டு நூல்களில் கூறப்பட்டுள்ள அரசிலக்கணங்களில் பிழையாமல் நடந்துகொண்டனர்.
(முதுபொழில் – நாவலந் தண்பொழில் / மண்ணுலகம்; மண்டிலம் – சோழ மண்டிலம், தொண்டை மண்டிலம் போன்ற பிற மண்டிலங்கள்.) 

சனி, 19 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 10

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 10
கொற்கைத் தலைவன்
சீருடைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்
இலங்குவளை இருஞ்சேரி
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப் பொருந.
  மாங்குடி மருதனார், மதுரைக். 6:  134 - 138
 பெரிய நன்மக்களிடத்து மேம்பட்டுத் தோன்றுவதால் புகழையுடைய  சிறந்த தலைமைப் பண்பினை உடையாய்-
சூல்முற்றி, ஒளி முதிர்ந்து விளங்கும் சிறந்த முத்துக்களையும் – விளங்கும் சங்கினையும்  மூழ்கி எடுப்பவர் உறையும் சேரிகளையும் கள்ளாகிய உணவை உண்ணும் இழிந்த   குடிகள் தங்கியுள்ள சிற்றூர்களையும் கொண்ட கொற்கை என்னும் நல்ல ஊரில் உள்ளார் விரும்புதலையுடைய பொருநனே.
       கொற்கை முத்து,சங்கு ஆகியவற்றைக் குளிப்பார் இருக்கைகளையும், கள் உண்பார் இருக்கைகளையும் புறஞ்சேரிகளாய்க் கொண்ட ஊராகும். நெடுஞ்செழியன் , கொற்கை என்னும் துறைமுகப் பட்டினத்திற்கு உரிமை பூண்டவன் என்பது இதனால் உணரப்படும்.
( கொண்டி – கொள்ளப்படுவது – உணவு ஈண்டு, கள் உணவு ; வளை – சங்கு.) 

வெள்ளி, 18 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 9

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 9
தலையாலங்கானத்து வெற்றி வீரன்
கால் என்னக் கடிது உராய்அய்
நாடு கெட எரிபரப்பி
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
 அரசுபட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடுதிறல் உயர்புகழ் வேந்தே  
மாங்குடி மருதனார், மதுரைக். 6:  125 – 130
 
காற்றினைப் போல் விரைவாகப் பரந்து சென்று பகைவர் நாடுகள் அழியுமாறு தீயிட்டுக் கொளிவினான்.
 தலையலங்கானம் என்னும் ஊரில் பகைவர்க்கு அச்சம் தோன்றும்படித் தங்கி, நெடுநில மன்னர் இருவரும், குறிநில மன்னர் ஐவரும் இறந்துபடுமாறு போரில் அவர்களை வென்று,  அவர்களுடைய முரசங்களைக் கைக்கொண்டு களவேள்வி செய்த கொல்லுகின்ற வலிமை மிகுந்த புகழையுடைய வேந்தே.
எழுவர் : சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியோர். நெடுஞ்செழியனின் தலையலங்கானத்து வெற்றி  இதனால் கூறப்பட்டது. பகைவர் எழுவரை வென்றதினால் இவன் தலையலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் எனப்பட்டான். 

வியாழன், 17 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 8

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 8
மழைக் கோள்
தான் தோன்றுவதற்கு உரிய நாளில் தோன்றும் வெள்ளி என்னும் கோள்மீன், தன்னுடைய இயங்கும் திசை மாறித் தென்திசையில் தோன்றினாலும், மழை வறக்கும்.
’வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
 திசை திரிந்து தெற்கு ஏகினும்’ ( ப. பாலை. 1-2)
’வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
 பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப’ – ( பதிற்றுப். 24)
’மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தெந்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே ’– புறநா. 117)
’வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
 பள்ளம் வாடிய பயனில் காலை ’– (புறநா. 388)
’கரியவன் புகையினும்  புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ’ – சிலம்பு. (10: 102)
 வெள்ளி என்னும் கோள்மீன் தென்திசையில் எழுதல் தீய நிமித்தமாகும். 

புதன், 16 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 7
                                                          முது வெள்ளிலை
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
 வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பொளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்களிச் செறுவின் வெள் உப்புப்  பகநரொடு
ஒலி ஓவாக் கலியாணர்
முது வெள்ளிலை  
                  மாங்குடி மருதனார், மதுரைக்.  6 : 106 – 119
மலைகள் காய்தற்குக் காரணமாகிய கடிய முதுவேனிலால், பெரிய மேகம், மழையைத் தன்னிடத்து மறைத்து வைத்துக் கொண்டாலும், தான் தோன்றுவதற்கு உரிய நாளில் தோன்றும் வெள்ளி என்னும் கோள்மீன், தன்னுடைய இயங்கும் திசை மாறித் தெந்திசையில் தோன்றினாலும், யாறுகளில் வெள்ளம் மாறாமல் பெருகிவரும், அதனால் விளைவுகளும் பெருகும், வயல்களில் நன்கு விளைந்த நெற்பயிர் காற்றடித்து அசைதலால் எழும் ஓசையும்…
   நெற்கதிர் அறுப்போர் ஓசையும் – பறவைகள் எழுப்பும் ஒலியும் – சுறாக்கள் திரியும் கடலில் நீர்த்திவலைகள் – மணலையுடைய கடற்கரையில்  குடமுழாப் போன்ற காய்களையுடைய தாழையை வேலியாக உடைய  - இளமரக்காவில் வந்து செறிந்து வீசும் ஓசையும் -  மீன்வேட்டையாடிய படகுகள் கரையை அடையும் ஆரவாரமும் -  உப்பு விற்போர் ஒலியும் -  புது வருவாய் உடையதும் ஆகிய ஊர் முதுவெள்ளிலை ஆகும்.
   நெல் வளம், மீன்வளம், உப்பு வளம் ஆகிய மூன்றும் நிறைந்த பகுதியாக முதுவெள்ளிலை விளங்குகிறது. இவ்வூர்  குறித்து ஆய்க.
   ஓதை, கம்பலை, இசை எனும் சொற்கள் வேறுபட்ட ஒலிகளைக் குறிப்பன.
(கம்பலை – அரவம், ஓசை
 ‘ கம்பலை கம்மை கலியே அழுங்கல்
   என்றிவை நான்கும் அரவப் பொருள. ( தொல்.)
நெற்கதிர் அசையும் ஒலி – ஓதை ; நெல் அரிபவர், மீன்வேட்டுவர் எழுப்பும் ஒலி – கம்பலை ; பறவைகள் எழுப்பும் ஒலி – இசை ; உப்பு விற்பவர் எழுப்பும் ஒலி – ஒலி என்றும் குறிப்பிடுவார் இப்புலவர்.
 சலம் – மாறுபாடு ; பொதும்பர் – இளமரக்கா ; நளி – செறிவு ; திமில் – படகு ;  செறு – வயல் / உப்புப் பாத்தி ; அளவர் – உப்பளத் தொழிலாளர் ;யாணவர் – புதுவருவாய்.) 

செவ்வாய், 15 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 6

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 6
கடல் வாணிகம் – சாலி நெல்
வான் இயைந்த இருமுந்நீர்ப்
பேஎம் நிலைஇய இரும் பெளவத்து
கொடும் புணரி விலங்கு போழ
 கடுங்காலொடு கரை சேர
நெடுங்க்கொடி மிசை இதை எடுத்து
இன்னிசைய முரசம் முழங்க
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
 துறை முற்றிய துவங்கு இருக்கை
தெண் கடல் குண்டு அகழி
 சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ  
               மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  75 -88 
மேகங்கள் நீரைப் பருக்குவதற்காகப் படிந்த, பெரிய மூன்று நீர்மையை உடைய. அச்சம் நிலைபெற்று விளங்கும் கரிய கடலில், கடிய காற்றினால் வளைத்து வீசும் அலைகளைக் குறுக்கே பிளந்து செல்லுமாறு நாவாய்களின் பாய்கள் விரிக்கப்படும்.
   அந்த நாவாய்களில் இனிய ஓசையை உடைய முரசும் முழங்கும், பொன் மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருள்களை நாட்டில் உள்ளவர்கள் நுகருமாறு வாணிகம் நன்கு நிலைபெற, அந்நாவாய்கள் கரையை அடையும், நெடிய கொடிகள் பாய்மரத்தின் மேல் ஆடும். கரு மேகங்கள் சூழ்ந்த மலை போல அம் மரக்கலங்கள் கடற்பரப்பில் அசையும்.
இத்தகைய தெளிந்த கடலாகிய ஆழத்தினையுடைய கிடங்கினையும், தலைமை சான்ற உயர்ந்த சாலி என்ற நெல்லின் பெயரைப் பெற்ற சாலியூரைக் கைப்பற்றிக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே.
( முந்நீர் – நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய தொழில் புரிவது ;  சாலியூர் – கடலை அரணாகக் கொண்ட ஒரு துறைமுகம். ; சாலி – உயர்ந்த வகை நெல் / செந்நெல்  ;  புணரி – அலை .) 

திங்கள், 14 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 5

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 5
தமிழ்நாட்டின் எல்லைகள்
 தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்த தொழில் கேட்ப
   மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 70 - 72
தெந்திசையில் குமரியை எல்லையாகவும். வடதிசையில் பெரிய மேரு மலையை எல்லையாகவும், கீத்திசையிலும் மேற்றிசையிலும் கடலை எல்லையாகவும் கொண்டு இடைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்வோர் யாவரும், தம்முடன் பாண்டியனுக்கு உள்ள பழமையைச் சொல்லி அவன் ஏவல் கேட்டு ஒழுகுமாறு வெற்றியோடு சிறந்து வாழ்ந்த….
மேலும் காண்க :  வடாஅது பனிபடு நெடுவரை…. புறநா. 6 . தென்குமரி வடபெருங்கல் …… புறநா. 17.
( வரை – மலை ; மிளை – காவற்காடு ; கிடங்கு – அகழி ;  வட பெருங்கல் – இமய மலை ; வெற்றம் – வெற்றி.) 

ஞாயிறு, 13 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 4

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 4
மதநீர்
விழுச்சூழிய விளங்கு ஓடைய
கடுஞ் சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ் சென்னி
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
 மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  43 - 47
 போர்த் தொழில் பழகிய பெரிய யானைகள் சிறந்த முகபடாத்தை உடையவை  ; விளங்கும் நெற்றிப் பட்டம் அணியப்பெற்றவை, மிகுந்த சினத்தை உடையவை ; மணம் கமழும் மதநீர் ஒழுகுவதால் சேறு படிந்த தலையினை யும் , மலை என்று மயங்கும் வண்ணம் தோற்றமும் கொண்டவை . இவை சினம் மிகுந்து போர்க்களத்தில் உள்ள வீரர்களைக் கொன்று திரிவன.
 யானையின் மதநீர்க்கு மணம் உண்டு, மதநீரின் மணம் மணமகளின் கூந்தலின் மணம் போன்றது என்று திருத்தக்கதேவர் கூறுவார்.
 “ புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம்
 மணமகள் கதுப்பு என நாறும் “ – சீவக. 1621.
( குழி – யானையின் முகபட்டம் ; ஓடை – யானையின் நெற்றிப்பட்டம் ;அளறு – சோறு ; குரூஉ – நிறம் ;  வீறு – நெற்றி .) 

சனி, 12 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 3

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 3
தலைச் சங்கத் தமிழ்
தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந.
                         மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  40 – 42
                  பக்க மலையில் விழுகின்ற அருவிகளையுடைய பொதிய மலையில் இருக்கும் கடவுளாகிய அகத்தியர், தமிழ் நாட்டை ஆளாதபடி இராவணனை விரட்டியவர். கிட்டுதற்கரிய வலிமையுடையவர், பழமை முதிர்ந்தவர், அத்தகைய முனிவரின் பின்னவனாய் எண்ணப்பட்டுச் சான்றோனாய்த் திகழும் தகுதியைப் பெற்ற ஒப்பற்றவனே.
                    தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திய இராவணனை, அகத்தியன் பொதியமலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினான் என்பது புராணச் செய்தியாகும்.
 “ பொதியிலின் கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தால் பிணித்து இராக்கதனை ஆண்டு இயங்காமை விலக்கி,”
                         தொல்காப்பியம் – பாயிரம் நச்சினார்க்கினியர் உரை, இதனால், அகத்தியனுடன் தலைச்சங்கத்து இருந்து பாண்டியன் தமிழ் ஆராய்ந்த சிறப்புக் கூறப்பட்டது.
பொதியில் குன்றத்து முனிவன், அகத்தியன். முனிவர்களைக் கடவுளர் எனக் கூறும் வழக்கு உண்டு. அகத்தியனுடன் பாண்டியன் தலச் சங்கத்து இருந்து தமிழ் ஆராய்ந்தமை இறையனார் களவியல் உரையாலும் புலப்படும்.
( குழம்பு – திரள் / கும்பல் ; வாலுவன் – சமையல்காரன் ; துப்பு – வலிமை) 

வெள்ளி, 11 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 2

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 2
அமைச்சர்கள்
பொய் அறியா வாய் மொழியால்
புகழ் நிறைந்த நல்மாந்தரொடு
நல் ஊழி அடிப்படர
பல்செல்வம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
                    மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  19 – 23
எக்காலத்தும் உண்மை மொழிகளைப் பேசுதலால், புகழால் நிறைந்து, பொய்ம்மொழியைக் கேடறியாத நல்ல அமைச்சர்களுடன் நன்றாகிய ஊழிக்காலம் எல்லாம் பல அரசர்களும் தன்னைப் பணிந்து நடக்கவும், பல வெள்ளம் என்னும்  பேரெண்ணை உடைய பல ஆண்டுகள் தன்னுடைய அரசாளும் தன்மையைப் பலரும் சிறப்பித்து மேலாகப் போற்றவும் உலகத்தை ஆண்ட உயர்ச்சி பெற்றோர் குடியில் தோன்றியவனே.

வியாழன், 10 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 1

பத்துப்பாட்டு – இரண்டாம் பகுதி
மதுரைக்காஞ்சி
உரையாசிரியர் – முனைவர் வி.நாகராசன்
மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதனார் பாடிய, மதுரைக்காஞ்சி  -  பத்துப்பாட்டு நூல்களில் ஆறாவதாக இடம்பெற்றுள்ளது. 782 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது.
தலையலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடு பேற்றின் நிமித்தம் பல்வேறு நிலையாமைகளைச் சொல்லி அறிவுறுத்தற்காகப் பாடப்பெற்றது.
மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 1

உலகத் தோற்றம்
 ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக
தேன் தூங்கும் உயர்சிமைய
மலை நாறிய வியல்ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப
வியல் நாள் மீன் நெறி ஒழுக
 பகற் செய்யும் செஞ்ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்க
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 1 -12
அகன்ற நீர்ப்பரப்பில் உயர்ந்த அலைகள் எழுந்து ஒலிக்கும் கடலை எல்லையாகக் கொண்டு, தேன் அடைகள் தொங்குகின்ற உயர்ந்த சிகரங்களைக் கொண்ட மலைகள் தோன்றிய இவ்வுலகத்தில், ஆகாயத்தின்கண் காற்று வலமாகச் சுழன்று வீசிற்று, அகன்று விளங்கும் நாள் மீன்கள், தாம் இயங்குவதற்குரிய பாதைகளில் பிறழாது இயங்கின. பகற் பொழுதை உண்டாக்கும், சிவந்த கதிர்களை உடைய ஞாயிறும், இரவுப் பொழுதை உண்டாக்கும் வெண்ணிறக் கதிர்களை உடைய திங்களும் குற்றமில்லாமல் விளங்கித் தோன்றின. மேகங்கள், மழை வேண்டும் காலத்துப் பிழையாது தம்முடைய பெய்தல் தொழிலால் உதவி புரிந்தன. அதனால், எல்லாத் திசைகளிலும் விளையுள் பெருகி, வளம் கொழித்தது, ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி விளைந்தது, விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிர்க்கும் தாம் பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டு தவறாமல் வழங்கின.
நீர்ப்பரப்பு முதலில் தோன்ற, அதன்பின் நிலப்பரப்பு, கடலிலிருந்து வெளிப்பட்டது. உலக அமைப்பு, காற்று மண்டிலம், விண்மீன்களின் இயக்கம் ஆகிய வானியல் செய்திகள் அறிந்து  இன்புறுதற்குரியன.
( முந்நீர் – கடல் ; நாறிய – தோன்றிய ; மாதிரம் – வான்வெளி / திசை ; கொட்ப – சுழல ; தொடுப்பு – விதைப்பு ; நந்த – தழைப்ப / வழங்க .) 

புதன், 9 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 9

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 9

போர் ஒழிய வேண்டி..
எடுத்தெறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம்  வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல்துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
 உண்ணது உயங்கும் மாசிந் தித்தும்
ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
  68 – 76]
பாசறையில் , மன்னன் ஒருகையைப் படுக்கை மேலே வைத்து, கடகம் அணிந்த மற்றொரு கையால் தலையைத் தாங்கியவனாய்ப் போர்மேற் செல்லும் மிக்க விருப்பத்தால், உறக்கம் கொள்ளாமல் இரவு முழுதும் போர்க்களக் காட்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருக்கிறான் ; போரில் பகைவர் எறிந்த வேல் பட்டமையால் புண் மிகுந்து, தம் பெண் யானைகளையும் மறந்து நின்ற களிறுகளை நினைக்கிறான் ; அடிபட்ட பாம்பு துடித்தாற் போன்று துடிக்கும் வண்ணம், களிறுகளின் பெரிய கையினை வெட்டி வீழ்த்தித் தாம் அணிந்த தேன் துளிக்கும் வஞ்சி  மாலைக்கு வெற்றியைத் தேடித்தந்து, செஞ்சோற்றுக்கடன் கழித்துப் போரில் வீழ்ந்துபட்ட வீரரை நினைக்கின்றான் ;  காவலாய்க் காதோரம் அணிவித்த தோற்பரிசையினையும் அறுத்துக்கொண்டு பாய்ந்த கூர்மையான அம்பு நுனிகள் அழுந்துவதால், தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும் குதிரைகளை நினைக்கின்றான் ; இங்ஙனம் பலவற்றையும் நினைத்து வருந்துவதால் உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றான் மன்னன்.
( கண்படை – உறக்கம் ; எஃகம் – வேல் ; துமிய – வெட்டுப்பட்டு வீழ ;  சோறு வாய்த்து ஒழிந்தோர் – செஞ்சோற்றுக் கடனாக உயிர்கொடுத்து இறந்தோர் ;  வைந்நுனைப் பகழி – கூர்மையான அம்பு ;  மா – புரவி ; கடகம்  - கங்கணைம் , ஆடவர் கையில் அணியும் அணி.)
மேலும் காண்க : புறநா.312 ; ம.காஞ். 735 – 736 ; கள. நாற். 13.
முற்றும் 

செவ்வாய், 8 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 8

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 8
மிலேச்சர்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக
            நப்பூதனார், முல்லைப். 5 : 64  – 66

வலிய கயிற்றில் திரை இழுக்கப்பட்டு, உள் அறை, புற அறை ஆக இரண்டு அறைகள் உடைய அரசனின் பாசறை புலிச்சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருக்கின்றது ; உள் அறையாகிய பள்ளியறையில் அரசன் இருக்க, அவனருகில் வாய் பேச முடியாத ஊமை மிலேச்சர்கள் பாதுகாவலுக்காக நிற்கிறார்கள் ; அவர்கள் மடங்கிப் புடைத்துத் தோன்றும்படி இறுகக் கட்டின ஆடை அணிந்திருக்கிறார்கள் ; அவ்வாடை மேலே குதிரைச் சவுக்கு வளைந்து கிடக்கிறது ; அவர்கள் சட்டை அணிந்திருக்கிறார்கள் ; வலிமைமிக்க உடல் வனப்புகொண்ட அம்மிலேச்சர்களின் தோற்றம் அச்சம் தரும் வகையில் உள்ளது.
( மிலேச்சர் – பிறநாட்டார் , திருத்தமற்ற மொழியைப் பேசுவோர், அறிவீனன்.) 

திங்கள், 7 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 7

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 7
நாழிகைக் கணக்கர்
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெரீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னன் இனைத்து என்று இசைப்ப
     நப்பூதனார், முல்லைப். 5 : 55 – 58
 நாழிகையை அளந்து இத்துணை என்ரு அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர், மன்னனைக் கையால் தொழுதேத்தி ‘ கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே, உன்னுடைய நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை காண்’ என்று மன்னனுக்கு அறிவிக்கின்றனர்.
(குறுநீர்க் கன்னல் – நாழிகை வட்டில், வட்டிலில் நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டு, அந்நீரினை அளந்து காணும் கருவி ; எறிநீர் – அலையெறியும் கடல் ; வெரீஇய – வெல்லுதற்கு ; இனைத்து – இவ்வளவு,)
 மேலும் காண்க:
” குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்பவர்” ( மணிமே.7)
   “ நாழிகைக் கணக்கர்,” ( சிலம்பு.5)
”குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது

கதிர்மருங் கறியாது அஞ்சுவரப் பாஅய்” – ( அகநா.42) 8/3/16

ஞாயிறு, 6 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 6

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 6
மெய்காப்பாளர்
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வாள் அசைவளிக்கு அசைவந் தாங்கு
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ  
                                                     நப்பூதனார், முல்லைப். 5 :  50 – 54
நெடிய நாக்கினை உடைய ஒளி பொருந்திய மணியின் ஒலி குறைந்து அடங்கின நள்ளிரவில், புனலிப் பூக்கள் பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அசைந்தாடுவதைப் போன்று, மயிர்க்கட்டுக் கட்டிச் சட்டையிட்ட , நல்லொழுக்கமிக்க, வயது முதிர்ந்த , மெய்காப்பாளர் துயில் மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே  மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர்.
( அதிரல் – மோசி மல்லிகை ; சிதர் – மழைத் தூறல் ;  ஏமம் – பாதுகாவல், ) 

சனி, 5 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 5

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 5
வீர மங்கையர்
குறுந்தொடி முன்கை கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய் உமிழ் கரையர் நெடுந்திரிக் கொளீஇ
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
                         நப்பூதனார், முல்லைப். 5 :  45 – 49
அரசனுக்கென அமைந்த பாசறையின்கண், குறிய தொடியணிந்த முன்கையினையும், கூந்தல் அலைகின்ற சிறு முதுகினையும் உடைய, இரவைப் பகலாக்கும் ஒளி பொருந்திய திண்மையான பிடியமைந்த வாளினைக் கச்சோடு சேர்த்துக் கட்டிய மகளிர், பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டு, நெய் வார்க்கும் குழாயால் நெய் வார்த்து விளக்கேற்றுகின்றனர். வாள் புனைந்த வீர மங்கையர்.
( தொடி – வளையல் ; திண்பிடி – திண்ணிய கைப்பிடி ; கையமை விளக்கம் – பாவை விளக்கு )