செவ்வாய், 24 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 13

பட்டினப்பாலை – அரிய செய்தி – 13
பட்டினம் பெறினும்….!
பல் ஆயமொடு பதி பழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
 சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே
                            கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 213 - 220
குற்றமற்ற பிறநாடுகளில், அறிவு சான்ற சுற்றத்தையுடைய, விழாக்களை நிகழ்த்திய பழைய ஊரில் உள்ள பலரும், புகார் நகரில் சென்று குடியேறினார் போல –
பற்பல குடிமக்களுள் உயர்ந்தவர்களாய்த் தத்தம் நிலங்களைக் கைவிட்டு, நீங்கிப் புகார் நகரை அடைந்த பல மொழிகளில் திறமை சான்ற மக்கள், இவ்வூரில் உள்ள நன்மக்களுடன் கூடிப்பழகி இனிதே வாழ்கின்றனர். இத்தகைய குறைவுபடாத தலைமையை உடையது காவிரிப்பூம்பட்டினம்.
 நீண்ட கரிய கூந்தலையும், விளங்கும் அணிகலன்களையும் உடைய என் காதலி என்னைப் பிரிந்து தனித்திருப்ப, அவளைத் துறந்து யான் நின்னுடன் வருதல் இயலாது . நெஞ்சே..! நீ சென்று வாழ்வாயாக -  அதாவது ….. குறையாத செல்வ வளமுடைய காவிரிப்பூம்பட்டினமே எனக்கு உரிமையாகக் கிட்டுவதாயினும், என் காதலியைத் துறந்து உன்னுடன் வருதல் இயலாது எனத் தன் நெஞ்சை முன்னிலைப்படுத்தித் தலைவன் கூறினான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக