செவ்வாய், 31 மே, 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 1

மலைபடுகடாம் – அரிய செய்தி : 1
பண்டைய இசைக் கருவிகள்
திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண்வார் விசித்த மிழவொடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம்குழல் துதைஇ
நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் கருக்கில் காய கலப்பையிர்
                   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 1 – 13 

                              செல்வத்தை உண்டாக்கும் மழையைப் பெய்த , இருண்ட நிறத்தையுடைய மேகம், வானில் நின்று முழங்கும் ஓசையைப் போல, பண்களின் ஓசை. தன்னுடைய கண்களிலிருந்து தோன்றுமாறு, திண்ணிய வாரினால் இறுக விசித்துக் கட்டப்பட்ட மத்தளத்துடன், சிறுபறையும், நன்றாக உருக்கித் தகடாக வார்க்கப்பட்ட  கஞ்ச தாளமும், விளங்குகின்ற கரிய பீலியை அழகிய தழை எனக் கட்டியுள்ள ஊது கொம்பும், கணுக்களின் நடுவே வெற்றிடம் உண்டாகுமாறு திறக்கப்பட்டுள்ளதும், யானையின் துதிக்கை போன்றதுமாகிய நெடுவங்கியமும், இளி என்னும் நரம்பின் ஓசையைத் தன்னகத்தே கொண்டு ஒலிக்கும் குறிய சிறந்த தூம்பும், பாட்டினை அதற்குரிய சுருதி குறையாமல் தன்கண் கொண்டு விளங்கும்  இனிய குழலும் இணைந்து விளங்க, கண்களுக்கு நடுவில் நின்று ஒலிக்கும் நரம்பின் ஓசையையுடைய கரடிகை என்னும் கருவியும். விளக்கத்தையுடைய தாளத்துடன் ஒத்து ஒலிக்கும் வலிய வாயினையுடைய சல்லிகை என்னும் பறையும்,
                              மாத்திரையின் அளவினைக் காட்டும் தாளத்தினையுடைய ஒருகண் மாக்கிணையும், கூறப்படாத பிற இசைக் கருவிகளும், கார்காலத்தில் பழுத்து விளங்கும் பலா மரத்தின் காய்களை மிகுதியாக உடைய கொத்துப் போல, தம்மில் ஒத்த கனத்தையுடையனவாக முடிச்சுக்களாகக் கட்டிக் காவடியில் தொங்குமாறு அமைந்த இசைக் கருவிகளின் மூட்டைகளை ஏந்தியவர்காளாய்க் கூத்தர்கள் சென்றனர்.
 எல்லா இசைக்கருவிகளுக்கும் மத்தளம் அடிப்படையாக விளங்குதலால் முதலில் கூறப்பட்டது,
                            தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி,  கஞ்சக் கருவி எனும் நால்வகைக் கருவிகளும் ஈண்டுச் சுட்டப்பட்டுள்ளன
( ஆகுளி – சிறுபறை ; பாண்டில் – கஞ்சதாளம் ; அடர் – தகடு ; கோடு – கொம்பு ; உயிர் – துதிக்கை ; தூம்பு – நெடுவங்கியம் ; பீலி – இசைக்கருவி ; இளி – ஏழு நரம்புகளில் இளி என்னும் நரம்பில் எழும் ஓசை ; பயிர் – அழைத்தல் ; தட்டை – கரடிகை  / தட்டைப்பறை ; எல்லரி – சல்லிகை / பறை ; நொடி – கூறுதல் ;‘ பதலை -  ஒருகண் மாக்கிணை ; துணர் – கொத்து ; கலம் – இசைக்கருவி ; பரம் – மேலாகிய ; பையிர் – பை உடையிர்.) 

1 கருத்து: