புதன், 1 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 2

மலைபடுகடாம் – அரிய செய்தி : 2
யாழ் - பேரியாழ்
தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்தன்ன  நுண் துளை இரீஇ
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன்போல் பச்சை
வதுவை நாறும் வண்டுவாழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண்நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
 வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்
                   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 21 – 37
                பேரியாழ் – வளையலின் உறழ்ச்சியைப் போன்ற உறழ்ச்சியுடைய ஒன்பது வார்க்கட்டினை உடையது.
                    யாழ் நூலின் கூறுபாடுகள் அனைத்தும் நிரம்பப் பெற்றது. வெண்சிறு  கடுகின் அளவுகூட நரம்புகள் முறுக்கிக் கொள்ளாமல் உருவிச் சரி செய்யபட்டு அதனின்றும் வெளிப்படும் ஓசையைச் செவியால் ஓர்ந்து பார்த்துக் கட்டப்பட்டுள்ள வடித்து முறுக்கிய நரம்புகளை உடையது.
                   வரகின் கதிர் நீண்டு விளங்குவது போல், நெருங்கிய நுண்ணிய துளைகளையிட்டு, அத்துளைகள் நிரம்பும்படி சுள்ளாணிகளால் தைக்கப்பட்ட தோலினை உடையது.
                  யாழின் நரம்புகள், பத்தரின் மேற்பகுதியில் செல்லுமிடத்தில் தொய்வின்றி வலிமை பெற நிற்குமாறு குறுக்கே யானைக் கொம்பினால் புதியதாய்ச் செய்யப்பட்ட யாப்புப் பொருந்தும்படி அமைக்கப்படும்.
                     ஒலியைத் தன்னிடத்தே வாங்கி வெளிப்படுத்தும் யாழ் பத்தரின் மேல் பசையிட்டுச் சேர்த்திப் புதிதாகப் போர்க்கப்படும் பொன் போன்ற நிறமுடைய தோலினை உடையது.
                         வண்டு, மணம் கூடிய மகளிரின், மணம் நாறுதற்குக் காரணமாகிய மயிரினையுடைய அழகு, கட்புலனாக விளங்கும் மடந்தையின் மார்பிடத்துச் சென்று, பின்பு இல்லையாகும் மயிர் ஒழுங்குடைய அழகிய வயிற்றைப் போலப் ‘ பொல்லம் பொத்துதல்’ , நடுவே அமைந்து, கண்ணுக்கு இனிதாக விளங்கும், தனக்குக் கூறப்படும் அளவில் வேறுபடாமல், பகுத்தல் உண்டாக அகத்திட்ட உயர்ந்த வளைந்த உந்தியை உடையது.
                           நுண்ணிய அரத்தால் அராவப்பெற்றதும், நுண்ணிய நீர்மையுடைய கரிய நிறத்தால், களம் பழத்தின் நிறத்தையுடையதும், கடுகித் தோன்றும் நிறத்தையுடையதும் ஆகிய வளைந்து ஏந்திய கோட்டினை உடையது பெரிய ஓசையை உடையது.
                   பேரியாழ் -  மகர யாழ், சகோட யாழ், செங்கோடி யாழ், என்ற யாழின் வகைகளில் ஒன்று ; இது பெருங்கலம் என்றும் கூறப்படும்.
 ( தொடி – வளையல் ; தொண்டு – ஒன்பது ; திவவு – வார்க்கட்டு, முறுக்காணி ; கடிப்பகை – வெண்சிறு கடுகு ; கேள்வி – இசை நூலின் நுட்பம் ; அரலை – கொடும்பு,கொடி முறுக்கு ; சுகிர் – வடித்தல் ; வரகின் குரல் – வரகின் கதிர் ; பத்தல் – அகடு / வயிறு ; சிலம்பு – ஒலித்தல் ; பசை – பற்று , பிசின் ; வெண்கை – யானைத் தந்தம் ; யாப்பு – பத்தரின் குறுக்கே அமைக்கப்பட்ட சட்டம் ;  பச்சை – தோல் ; வதுவை – மணம் ; ஐம்பால் – கூந்தல் ( குழல், அளகம், பனிச்சை, கொண்டை, துஞ்சை என ஐவை கூந்தல் ஒப்பனை.) ; ஆகம் – மார்பு ; அகடு – வயிறு ; கவடு – பிளத்தல் ; உந்தி – யாழ்ப் பத்தர்த் துளை ; நுவறிய – அராவிய ; மாமை – கருநிறம் ; உரு – நிறம் ; வணர்ந்து – வளைந்து ; உயிர் – ஒலி ; பேரியாழ் – 21 நரம்புகளை உடையது. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக