புதன், 15 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 16

மலைபடுகடாம் – அரிய செய்தி : 16
நடுகல்
1.   ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்லிசைப் பெயரொடு நட்ட
கல் ஏக கவலை எண்ணு மிகப் பலவே
                                      386 - 389
தம் ஏவலை ஏற்றுக்கொள்ளாத பகைவர் புறமுதுகிட்ட அளவில், தம் வெற்றி தோன்ற ஆரவாரித்தபோது, அதனைப் பொறாமல்.” இவ்விடம் உயிரைப் போக்கிக்கொள்ள ஏற்ற காலம்” எனக் கருதி, மீண்டுவந்து போரிட்டு,  தம் உயிரைக் கொடுத்த நாணத்தையுடைய மறவர்களின் கெடாத நல்ல புகையுடைய பெயர்களை எழுதி நட்ட நடுகற்கள் முதுகிட்டுப் போனவரை இகழ்வனவாய் அமைந்த, எண்ணற்ற பல வழிகள் உள்ளன.
நடுகல்
2.  செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு……
                          பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 394 - 396
நீங்கள் போகும் தேயத்தில், கல்லைப் பெயர்த்துக்கொண்டு அதில், ‘ இவ்வாறு பொருதுபட்ட இன்னான்’ என்று உலகம் அறிவதற்கு எழுதிய கடவுள், நல்ல அடிமரத்தையுடைய மராமரத்தின் நிழலில் நடப்பட்டிருக்கும். நடுகற்கள், இறந்துபட்ட இடத்தில் மட்டுமின்றி மரத்தின் நிழலிலும் நடப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக