சனி, 25 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 26

மலைபடுகடாம் – அரிய செய்தி : 26
நன்னன் – கொடைச் சிறப்பு
இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய
கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக்கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய்வளம் பழுநி
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி
தலைநாள் விடுக்கும் பரிசில் மலைநீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்றுசூழ் இருக்கை நாடு கிழவோனே
  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  576 – 583
                          புலவர் ஏற்ற கைந்நிறையும்படி பேரணிகலன்களைச் சொரிதலால், கீழ் நோக்கிக் கவிழ்ந்த, கொடுத்து உழந்த பெரிய கையிடத்து உண்டாகிய தான் கொடுத்த செல்வம், கெடுதலை அறியாதபடி, தப்பாமல் வளம் கொழிக்கும் ;  மூங்கில் வளர்ந்த நவிரம் என்னும் பெயரையுடைய மலையின் உச்சியில், விரைவாக மேகங்கள் மழையைச் சொரிந்தாற் போல, முதல் நாளிலேயே பரிசில் தந்து விடை கொடுத்து அனுப்புவான். மலை உச்சியிலிருந்து விழும் அருவிகள், வென்று உயர்த்திய, கொடிகளைப் போலத் தோன்றும், இத்தகைய மலைகள் சூழ்ந்த நாட்டிற்கு அவன் உரிமையுடையோன் ஆவன்.
                                  நன்னன் – ஆடை, உணவு, அணிகலன், தேர், யானை, குதிரை, பசு, பொருட்குவை ஆகியவற்றைக் கூத்தர்க்கும் விறலியர்க்கும்  புலவர்க்கும் அவர்தம் சுற்றத்தார்க்கும் வழங்கி  மகிழ்வான்.  கூத்தரின் தலைவனுக்குப் பொற்றாமரைப் பூவினையும், விறலியர்க்குப் பொன்னரிமாலை முதலிய அணிகலன்களையும் பரிசாக வழங்குவான்.( 561 – 575)
 ( கலிங்கம் – ஆடை ; முடுவல் – பெண்நாய் ; புகல் – விருப்பம் ; வாரி – யானை மிகுதியாக உள்ள இடம் ; பழுநி – முற்றுப்பெற்று ;இலம்பாடு – வறுமை ;  இலம்படு புலவர் – இல்லாமையால் வருந்தும் புலவர்.)
முற்றும்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை – அரிய செய்திகள் – முற்றின.

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -1 …… தொடரும் ……………. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக